உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை புதுச்சேரி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை புதுச்சேரி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

புதுச்சேரி : மூன்று நாள் அரசு பயணமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இன்று புதுச்சேரி வருகின்றார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாட்டின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மூன்று நாள் பயணமாக இன்று 15ம் தேதி புதுச்சேரி வருகிறார். சென்னை விமானத்தில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, 1:10 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறார்.அங்கு கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். பின் அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக, கடற்கரை சாலை பழைய நீதி மன்றத்தில் வளாகத்தில் உள்ள ஐகோர்ட் நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு இரவு தங்குகின்றார்.மறுநாள் 16ம் தேதி மாலை 3:45 மணிக்கு ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி அப்துல் கலாம் கலையரங்கில் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தேசத்தை கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட தாயாரின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய தாயார் கேசரி தேவியின் பெயரில் ஒரு மரக்கன்றினை நட உள்ளார்.மாலை 4:00 மணிக்கு துவங்கும் இந்த கலந்துரையாடல் 5:00 மணிக்கு முடிகிறது.தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு விருந்தினர் மாளிகை செல்கிறார். மறுநாள் 17ம் தேதி காலை 11:00 மணிக்கு காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக நேரு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.தொடர்ந்து 12:00 மணிக்கு அங்கிருந்து விடைபெற்று புதுச்சேரி விமான நிலையம் வருகிறார். 12:15 மணி முதல் 12:25 மணி வரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1:15 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து டில்லி புறப்பட்டு செல்கிறார்.துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஆசிரம ஆடிட்டோரியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.குறிப்பாக போக்குவரத்து மாற்றம், எந்தந்த இடங்களில் போலீசார் பணியில் ஈடுபடுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. டி.ஜ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், சீனியர் எஸ்.பிக்கள் லட்சுமி சவுஜன்யா, பிரவீன்குமார் திரிபாதி, லால், நித்யா, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !