மரத்தை வெட்டியதற்கு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்
காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் வீட்டிற்கு மதில் சுவர் அமைக்கும் பணியை, ஆட்கள் மூலம் செய்தார். அப்போது, கூலி ஆட்கள் அவரது வீட்டின் பின் இருந்த தென்னை மற்றும் மா மரத்தை அதன் உரிமையாளரை கேட்டாமல் வெட்டி சாய்த்தனர்.மரங்கள் மொட்டையாக இருந்ததை கண்டதும் மரத்தின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி காலாப்பட்டு போலீசில் புகார் கொடுக்க சென்றார். இது மரத்தை வெட்டிய கூலி ஆட்களுக்கு தெரிய வந்தது. அதையடுத்து, அவர்கள், மரத்தின் உரிமையாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தவறுதலாக மரத்தை வெட்டி விட்டேன், மன்னித்து கொள்ளுங்கள் என, கேட்டனர்.பிள்ளைபோல் தென்னை மரத்தினை வளர்த்தேன். நொடியில் வெட்டி சாய்த்து விட்டீர்கள். தவறு என சொல்லி விட்டால், எல்லாம் சரியாகிவிடுமா? வெட்டிய மரத்திடம் வந்து மன்னிப்பு கேளுங்கள் என, உரிமையாளர் தெரிவித்தார்.ஆனால், கூலி ஆட்கள் மன்னிப்பு கேட்காத நிலையில், அவர்களை அழைத்து வந்தவர், வெட்டிய மரத்தின் முன் நின்று தோப்புக்கரணம் போட்டு, மன்னிப்பு கேட்டார். அந்த வீடியோவை, மரத்தின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில், வைரலாகி வருகிறது.