விஜய் மர்ச்சண்ட் கோப்பைக்கான போட்டி: புதுச்சேரி அணி முன்னிலை
புதுச்சேரி: விஜய் மர்ச்சண்ட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்கு எதிராக புதுச்சேரி அணியின் முன்னிலை பெற்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் நடத்தும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான விஜய் மர்ச்சண்ட் கோப்பைக்கான 3 நாள் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 11ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரில் துவங்கிய போட்டியில் பரோடா அணியும், புதுச்சேரி அணியும் மோதியது.முதலில் ஆடிய பரோடா அணி 121.5 ஓவர்களில் 309 ரன்களில் ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் சுரேந்திரா பிஷ்னோய் 5 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 121.3 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் ஆஹில் கச்ரு சிறப்பாக ஆடி 172 ரன்கள் எடுத்தார். ட்ராவில் முடிந்த இந்த ஆட்டத்தில் புதுச்சேரி அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றதால் 3 புள்ளிகள் பெற்றது. வரும் 17ம் தேதி துவங்கும் போட்டியில் புதுச்சேரி அணி, கோவா அணியுடன் மோதுகிறது.