மருத்துவமனையில் டாக்டரை நியமிக்காவிட்டால் போராட்டம் கிராம மக்கள் எச்சரிக்கை
பாகூர் : கீழ்பரிக்கல்பட்டு கிராமப்புற சுகாதார மையத்தில், டாக்டர் பணியிடம் காலியாக இருப்பதால், மருத்துவ உதவி கிடைக்காமல், 5 கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டில், கிராமப்புற சுகாதார மையம்இயங்கி வருகிறது. இங்கு, ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணிபுரிந்து வந்தனர். இதன் மூலமாக, கீழ்பரிக்கல்பட்டு, மேல்பரிக்கல்பட்டு, சின்ன ஆராய்ச்சிகுப்பம், பெரிய ஆராய்ச்சிகுப்பம், கொம்மந்தான்மேடு ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்தபொது மக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு பணியாற்றி வந்த டாக்டர் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் நோயாளிகள், கர்பிணி பெண்கள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக, 5 கி.மீ., துாரத்தில் உள்ள பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய நிலைய உள்ளது. இதனால் பொது மக்கள், கர்பிணிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக, 5 கிராமமக்களும், சுகாதாரத்துறை இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில், டாக்டரை நியமிக்கவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபட போவதாக, அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.