பைபாசில் சென்ற பஸ்களுக்கு அபராதம் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் அதிரடி
வில்லியனுார் : வில்லியனுார் நகருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழியாக சென்ற பஸ்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.புதுச்சேரி - விழுப்புரம் பஸ்கள் பெரும்பாலும் வில்லியனுார் நகருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழியாக செல்வதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பைபாசில் பயணிகளை இறக்கி விடுவதால் நீண்ட துாரம் நடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது.இதுகுறித்து போலீசார் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் மக்கள் குறைதீர் மன்றத்தில் வில்லியனுார் பகுதி சமூக அமைப்பினர் முறையிட்டனர். மேலும், போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதியிடம் மனு கொடுத்தனர்.அதன் பேரில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனியர் எஸ்.பி., உத்தரவின் பேரில், மேற்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் கண்ணகி பள்ளி ரவுண்டான ஆகிய பகுதியில் நின்று பைபாசில் வரும் பஸ்களை நிறுத்தி வில்லியனுார் நகர பகுதிக்குள் சென்று வருமாறு அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.அடுத்த சில தினங்களில் மீண்டும் பைபாஸ் சாலையில் சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கடந்த வாரம் முதல் மீண்டும் வில்லியனுார் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக சென்ற பஸ்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் தற்போது பெரும்பாலன பஸ்கள் நகர பகுதிக்குள் வந்து செல்கின்றது.இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் கூறுகையில், 'வில்லியனுார் நகர பகுதிக்குள் பஸ்கள் செல்லுமாறு அறிவுரை கூறியும் அபராத தொகை வசூலித்தும் வருகிறோம். அப்படி இருந்தும் ஒரு சில நேரங்களில் பஸ்கள் நகர பகுதிக்கு செல்லாமல் 'டைமிங்' பிரச்னை எனக்கூறி வில்லியனுார் பைபாஸ் வழியாக செல்கின்றன. நாளை 1ம் தேதி முதல் வில்லியனுாருக்குள் செல்லமால் பைபாஸ் வழியாக சென்றால் அபராதம் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என, தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.