பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு வில்லியனுார் வாலிபர் கைது
புதுச்சேரி : ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம், தாலி செயினை பறித்த வில்லியனுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம், ராம் நகரை சேர்ந்தவர் அசோக் மனைவி விஜயலட்சுமி,38. இவர், கடந்த 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு, கதிர்காமத்தில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலை வழியாக ராம் நகருக்கு திரும்பியபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர் விஜயலட்சுமி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து சென்றார். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜூ, ஏட்டுகள் கோவிந்தன், அரிகரன், இசைவேந்தன், ஜெயக்குமார், சதிஷ்குமார், அய்யப்பன் மற்றும் சபரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் பயன்படுத்திய பைக் பதிவெண் கொண்டு, சென்னையில் பதுங்கியிருந்த மர்ம நபரை பிடித்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் வில்லியனுார், சுப்ரமணிய சிவா நகர் பாவாடை மகன் விக்னேஷ்வர்,34; என்பதும், கூடப்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 6 சவரன் தாலி செயின், பைக்கை போலீசார் பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ரகுநாயகம் ஆகியோர் பாராட்டினர்.