தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் நடைபயிற்சி செல்வோர் அச்சம்
புதுச்சேரி, : லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, கல்லுாரி சாலை, ஹெலிபேட் மைதானத்தில் தெரு நாய் தொல்லையால், நடைபயிற்சி செல்வோர் அச்சமடைகின்றனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, தாகூர் கல்லுாரி சாலை, என்.சி.சி., வளாகம், ஹெலிபேட் மைதானத்தில் தினந்தோறும் காலை மாலை நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.நடைபயிற்சிக்கு வரும் சிலர் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கிறேன் என்ற பெயரில், தினந்தோறும் பிஸ்கெட் வாங்கி வந்து நடைபயிற்சியின்போது அளிக்கின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களும் ஒட்டுமொத்தமாக ஏர்போர்ட் சாலை, கல்லுாரி சாலை, ஹெலிபேட் மைதானத்தில் சுற்றித் திரிகிறது. நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களை விரட்டி கடிப்பதும், துரத்துவதால் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் முதியோர் அச்சமடைகின்றனர். நடைபயிற்சியின்போது 'கெத்து'க்காக பிஸ்கெட் வாங்கி வந்து தெரு நாய்களுக்கு உணவாக கொடுக்கும் ஆசாமிகள், தெரு நாய்கள் மீது உண்மையான பாசம் இருந்தால், அவற்றை தங்களின் வீட்டிற்கு கொண்டு சென்று வளர்த்து பராமரிக்கலாம்.இதுபோன்ற ஆசாமிகளால் லாஸ்பேட்டை ஹெலிபேட், ஏர்போர்ட் சாலை, கல்லுாரி சாலைகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, உழவர்கரை நகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.