| ADDED : பிப் 11, 2024 02:21 AM
புதுச்சேரி: சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பதாகைகள், போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்ட தலைமை நீதிபதியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் வளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநில தலைமை நீதிபதி, 'சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முக்கிய வீதிகள் மற்றும் பொது இடங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன.அனைத்து பேனர்கள், விளம்பர பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்,' என தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.புதுச்சேரி மாநிலத்தில் பேனர் கலாச்சாரத்தால் பல்வேறு இடங்களில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை உரிய உத்தரவுகள் பிறப்பித்திருந்தும், நடவடிக்கை எடுக்க வேண்டிய புதுச்சேரி அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியப்படுத்தி வருவதால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நீதிமன்ற நடவடிக்கைக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.