புதுச்சேரிக்கு லோக் ஆயுக்தா ஆணையம் வருவது... எப்போது? : உள்துறை அமைச்சக கதவை தட்டினால் தான் வழி
மத்திய, மாநில அரசுகளில் நிர்வாக குளறுபடிகள், ஊழல்களை தடுக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்- 2013 என, இரு முக்கிய சீர்திருத்த சட்டங்கள் பார்லிமெண்ட்டில் நிறைவேற்றப்பட்டன.இச்சட்டங்கள் 16.01.2014முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, லோக்பால் அமைப்பு என்பது மத்திய அரசால் ஊழலை கட்டுப்படுத்தப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் லோக் ஆயுக்தா அமைப்பு என்பது மாநில அளவில் அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையமாகவும் திகழ்கிறது. இது, அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரிக்கும் வலுவான ஆணையமாகவும் உள்ளது. பொது மக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கம். எந்த ஒரு அரசாங்க அதிகாரிக்கு எதிராகவும் ஊழல் அல்லது வேறுவிதமான முறைகேடு போன்ற புகார்களுக்கு பொதுமக்கள் நேரடியாக லோக் ஆயுக்தாவை அணுக முடியும். ஆனால், துரதிஷ்டவசமாக அரசின் நிர்வாக சீர்த்திருத்த குளறுபடிகளை களையும் வகையில் புதுச்சேரியில் லோக் ஆயுக்தா இன்னும் அமல்படுத்தப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, வரைவு விதிகள் திருத்தம் என, இன்னும் காகித அளவிலேயே இதற்கான கோப்புகள் சுற்றி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் மத்திய உள்துறை அமைச்சகம் சொன்ன, லோக் ஆயுக்தா சட்ட வரைவுகளில் திருத்தம் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. லோக் ஆயுக்தா மாநில ஆணையம் விஷயத்தில் புதுச்சேரி மிகவும் பின் தங்கியுள்ளது. இந்தியாவில் லோக் ஆயுக்தாவை முதன்முதலில் செயல்படுத்திய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். மகாராஷ்டிரா 1971ம் ஆண்டு மகாராஷ்டிரா லோக் ஆயுக்தா மற்றும் உப-லோகாயுக்தா சட்டம் மூலம் இந்த அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பினை நிறுவியது மகாராஷ்டிரா மாநிலமாக இருந்தாலும் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் ஒடிசா. தமிழகத்தில் கூட கடந்த 2018 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. லோக் ஆயுக்தா ஒரு சுதந்திரமான, நீதித்துறை போன்ற அமைப்பாகும். பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக இவ்வமைப்பு மிகவும் முக்கியம். அரசின் நலத்திட்டங்கள், பணம் சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் கொண்டு செல்ல கண்கொத்தி பாம்பாகவே இந்த அமைப்பு இருக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான இரட்டை ரயில் இன்ஜின் ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையில் ஒரே ஒரு போன் காலில் கூட அனுமதி பெற்று கொண்டு வந்துவிட முடியும். எனவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் கதவை தட்டி, சட்ட வரைவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்று இந்த அமைப்பினை புதுச்சேரியில் வலுவாக ஏற்படுத்த வேண்டும்.