உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதியஅமைச்சர் பதவி ஏற்பு விழா; எப்போது கவர்னருடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதியஅமைச்சர் பதவி ஏற்பு விழா; எப்போது கவர்னருடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதுச்சேரி: புதிய அமைச்சர் பதவி ஏற்பு தொடர்பாக கவர்னரை முதல்வர் ரங்கசாமி மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் பா.ஜ., மேலிடம் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. கூட்டணி அரசில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபுவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது. அவர்களும் ராஜினாமா செய்து கடிதங்களை வழங்கினர். நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டு கவர்னர் வழியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சூழ்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி கவர்னரை சந்தித்து பேசினார்.அப்போது சாய்சரவணன்குமார் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்நிலையில் நேற்று கவர்னர் கைலாஷ்நாதனை முதல்வர் ரங்கசாமி மீண்டும் சந்தித்து பேசினார். மாலை 4:30 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பு 4.40 மணியளவில் முடிந்தது. நியமன எம்.எல்.ஏ.,க்களை பொருத்தவரை மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நேரடியாக மத்திய அரசே நியமனம் செய்துவிட முடியும். அதன் பிறகு உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அமைச்சர் பதவியை பொருத்தவரை கவர்னர் தான் செய்து வைக்க வேண்டும். இது தொடர்பாக கவர்னர் முதல்வர் ரங்கசாமி விவாதித்தனர். அப்போது அமைச்சர் சாய்சரவணனுக்கு பதிலாக ஜான்குமாரை அமைச்சராக நியமிக்க பரிந்துரை கடிதம் கொடுத்தார். இந்த பரிந்துரை கடிதம் உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்குமார் எம்.எல்.ஏ.,விற்கு ஜூன் 5ம் தேதி பிறந்த நாள் வருகிறது. எனவே அதற்கு முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளார். எனவே 2ம் தேதி பதவி ஏற்பு விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தீவிரம்:என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., சந்திர பிரியங்காவிற்கு ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இருப்பினும் 2 ஆண்டுகள் கழித்து அவரிடம் இருந்து ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.அதன் பிறகு அத்துறையை முதல்வர் ரங்கசாமியே வைத்திருந்தார். பின் அமைச்சரவையில் மாற்றம் வேண்டும் என, ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமாரிடம் ஆதிதிராவிடர் துறை ஒதுக்கப்பட்டது. இப்போது பா.ஜ., வும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அமைச்சரவையில் இருந்த ஆதிதிராவிடர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது. இதற்கிடையில் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க முடிவு செய்துள்ளன. ஆதிதிராவிடர்கள் திட்டமிட்டே என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு புறக்கணிக்கிறது. இதுவே அதற்கு சாட்சி என எதிர்க்கட்சிகள் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளன.

நீங்களே பார்த்துகொள்ளுங்கள்

அமைச்சர் சாய்சரவணன்குமார் ராஜினாமா, நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வது குறித்த பா.ஜ., மேலிடம் முடிவினை பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விளக்கினர். அப்போது முதல்வர் ரங்கசாமி, நல்லது. இது உங்கள் கட்சி முடிவு நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என கூலாக கூறிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ