தேர்தலில் யாருக்கு சீட்காங்., கட்சி ரகசிய சர்வே
புதுச்சேரி மாநிலம், காங்., கட்சியின் கோட்டை. புதுச்சேரியில் ஆறு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்.,கட்சி கடந்த 2021ம் ஆண்டு நடந்த 15-வது சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஆட்சியை பறி கொடுத்தது. அதுவும் 2 தொகுதியில் மட்டுமே காங்., கட்சி வெற்றிப்பெற்றது அக்கட்சியிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் எப்போதும் காங்., கட்சியின் கோட்டை என மீண்டும் நிருபித்து வெற்றிக்கனியை பறிக்க காங்., மேலிடம் இந்த முறை தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றது. தி.மு.க., போன்று ஒவ்வொரு தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர் யார் என ரகசிய சர்வே டில்லி மேலிடம் எடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியில் கடந்த சட்ட சபை தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் யார், அவருக்கு தற்போது உண்மையிலேயே இப்போது செல்வாக்கு உள்ளதா, அவருக்கு அடுத்து யாரை நிறுத்தினால் அத்தொகுதியில் வெற்றி பெற முடியும் என அனைத்து தகவல்களையும் காங்., மேலிடம் சர்வே நடத்தி திரட்டியுள்ளது. இந்த சர்வே அடிப்படையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் சீட்டு கொடுக்கவும் காங்., மேலி டம் திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது.
அதிர்ந்த அரங்கம்...
இதற்கிடையில் புதுச்சேரி காங்., கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில நிர்வாகிகள் தேர்தல் வெற்றிக்காக ஆலோசனை கூறினார். காங்., மாநில செயலாளர் சரவணன் பேசுகையில், 'காங்., கட்சி இப்போது நெருக்கடியான சூழலில் உள்ளது. இவர் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.ஏ., என்றெல்லாம் பார்த்து யாருக்கும் சீட்டு தர வேண்டாம். யாருக்கு தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது; யாரை நிற்க வைத்தால் அத்தொகுதியில் காங்., வெற்றி பெறும் என்பதை தகுதி அளவுகோலாக வைத்து மட்டும் 'சீட்' கொடுங்கள். சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம். மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை தொகுதியில் நிற்க வைத்து ஒரு சீட்டையும் வீணடிக்க வேண்டாம். டில்லியில் இருந்து வரும் மேலிடக்குழு நேரடியாக வேட்பாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என, இந்தி, இங்கிலீஷ், தமிழ் மூன்று மொழிகளிலும் பொளந்து கட்ட, நம்முடைய உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்திவிட்டார் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் கைத்தட்டலால் அரங்கினை அதிரவிட்டனர்.