உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திடீர் ஆலோசனை:முதல்வருடன் திடீர் சந்திப்பால் அமைச்சரவையில் மாற்றமா? ஆதரவு சுயேச்சைகள் வெளிநடப்பால் சலசலப்பு

திடீர் ஆலோசனை:முதல்வருடன் திடீர் சந்திப்பால் அமைச்சரவையில் மாற்றமா? ஆதரவு சுயேச்சைகள் வெளிநடப்பால் சலசலப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வரும் சூழலில், எம்.எல்.ஏ., க்களிடம் தனித்தனியே மேலிட பார்வையாளர்கள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலிட பார்வையாளர்களை முதல்வர் சந்தித்து பேசியதால் அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுடன் மேலிட பார்வையாளர்கள்...புதுச்சேரி லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு 3 பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 3 பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்களின் அணுகுமுறை தான் காரணம் என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வயடையும் என போர்க்கொடி உயர்த்தினர்.என்.ஆர் காங்., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில் பா.ஜ., அமைச்சர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என கட்சி மேலிடத்தை சந்தித்து முறையிட்டு இருந்தனர். அதிருப்தியில் உள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் லாட்டரி அதிபரின் மகன் பின்னணியில் அணிவகுத்து, மழை நிவாரணம் வழங்கினர். அரசை கண்டித்து நடந்த கூட்டத்திலும் பங்கேற்றனர்.இது என்.ஆர்.காங்., மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதிருப்தி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பங்கிற்கு அடுத்த குண்டை வீசினர். சபாநாயகர் செல்வம் மீதும் சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு மட்டுமின்றி, பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அங்காளன், சிவசங்கர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டசபை செயலரிடம் மனு அளித்தனர். இதனால் பா.ஜ., விலும் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.இதனை முடிவுக்கு கொண்டுவர பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டது. இதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகர், புதுச்சேரி பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் நேற்று புதுச்சேரி வந்து அக்கார்டு ஓட்டலில் தங்கினர்.

முதல்வர் சந்திப்பு

கடந்த சட்டசபை தேர்தலின்போது பிரதமர் மோடி பிரசார ஏற்பாடுகளை முன்னின்று செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகர் புதுச்சேரி வந்த தகவலை அறிந்த முதல்வர் ரங்கசாமி, அவரை தனியாக சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குழப்பம், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., க்களின் நடவடிக்கை குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். அப்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.

தனித்தனியே சந்திப்பு

தொடர்ந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அவரசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகர், புதுச்சேரி பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஏனாம் எம்.எல்.ஏ.,வை கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தவிர்த்து மற்ற அனைத்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டணி தொடரும்:

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியே 10 நிமிடங்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகர் சந்தித்து பேசினர். எம்.எல்.ஏ.,க்கள் விவிலியன் ரிச்சர்ட், ஜான்குமார், கல்யாணசுந்தரம், வெங்கடேசன், அசோக்பாபு, ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., என வரிசையாக சந்தித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகர், வரும் சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தான் தொடரும். நீங்கள் எந்த தொகுதியில் நிற்க போகின்றீர்கள். அந்த தொகுதியில் என்ன மக்கள் பணிகள் செய்து உள்ளீர்கள் என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடம் கேள்வி எழுப்பினர். அவர்களின் பதில்களையும் பதிவு செய்தார். இந்த சந்திப்பு மாலை 3:00 மணி முதல் 5 மணி வரை நடந்தது.

சுயேச்சைகள் வெளிநடப்பு:

இதே கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ., ஆதரவு சுயேச்சைகளான அங்காளன், சிவசங்கர் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுரானாவை சந்திக்கவும் விரும்பவில்லை. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகருக்கு சால்வை அணிவித்துவிட்டு தனியாக சந்தித்து பேசவும் காத்திருந்தனர். திடீரென இருவரும் அவரையும் சந்திக்காமல் அங்கிருந்த வெளிநடப்பு செய்தனர்.

அமைச்சரவை மாற்றமா?

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தனர். சுழற்சி முறையில் அமைச்சர் பதவியை வலியறுத்தினர். ஆனால் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பா.ஜ., சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ., அமைச்சர்களை மாற்றம் செய்ய வேண்டும் என, நேற்றைய கூட்டத்திலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால், பா.ஜ., அமைச்சர்களில் மாற்றம் வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றும் பஞ்சாயத்து

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியே சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜூசந்திரசேகர் மாலை 5:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்றார். இரண்டாவது நாளாக இன்று மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களிடம் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை