மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்
புதுச்சேரி: கவர்னருடன் நிலவி வரும் மோதலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ.,வினர் கருதுகின்றனர். புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது. அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும், அதனை மத்தியில், உள்ள ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது. தற்போது என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருவது பொதுவெளியில் பேசு பொருளாக உள்ளது.மத்திய அரசின் உத்தரவை கவர்னர் செயல்படுத்துவார் என்பது முதல்வர் அலுவலக கிளர்க்குக்கு கூட தெரியும். என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியின் தலைவராக உள்ள முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசு கூட்டம் நிதி ஆயோக் உள்ளிட்ட எந்தக் கூட்டங்களில் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்காததே, கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம். முதல்வர் அவ்வப்போது டில்லி சென்று, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலில், எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதல்வர் டில்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே, புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து, வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.,வினர் கூறுகின்றனர். என்ன செய்யப் போகிறார் முதல்வர் ரங்கசாமி?