உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தள்ளாடும் படகு குழாம் கரையேறுமா? நிர்வாக ஓட்டைகளை அடைக்குமா அரசு

தள்ளாடும் படகு குழாம் கரையேறுமா? நிர்வாக ஓட்டைகளை அடைக்குமா அரசு

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளின் முதல் சாய்ஸ் நோணாங்குப்பம் படகு குழாம். இங்குள்ள படகில் சவாரி செய்து, பேரடைஸ் கடற்கரை சென்று, மணலில் விளையாடி மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்காக ஏராளமான பொழுதுபோக்கு சாதனங்களும், உணவகம், பார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவர்.ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற பேரடைஸ் கடற்கரை தற்போது, சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து, அங்கு பணியாற்றும் படகு குழாம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் படகு குழாம் மற்றும் அங்குள்ள கேண்டீன், கடைகளில் நடக்கும் முறைகேடுகள்.

படகுகள்

படகு குழாமில் 15க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகுகள் இருந்தது. பெஞ்சல் புயலின்போது 5க்கும் மேற்பட்ட படகுகள் சேதமானது. தற்போது 7 படகுகள் மட்டுமே உள்ளது. இந்த படகுகளும் காலை 9:00 மணிக்கு துவங்கி பகல் 3:00 மணி வரை மட்டுமே இயக்குகின்றன. அதன்பிறகு டிக்கெட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. காரணம், அதன்பிறகு படகு ஓட்டுநர்கள் வீட்டிற்கு சென்று விடுவதால் படகுகள் இயக்குவது கிடையாது.காலையில் புதுச்சேரி வந்து அறையில் தங்கி சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலையில் படகு சவாரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகுகள் இயங்காது என்ற தகவலை கேட்டு ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

கேண்டீன்

படகு குழாமில் பி.டி.டி.சி., சார்பில் ஓட்டல் இயங்குகிறது. இதில், 8 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அரசாங்க ஓட்டல் என்பதால், சுற்றுலா பயணிகள் வந்து அமர்ந்திருந்தால் கூட சர்வர் யாரும் வந்து என்ன உணவு வேண்டும் என கேட்பது கிடையாது. இப்படி உபசரிப்பு இல்லாததால், சுற்றுலா பயணிகள் வருவதும் குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை உணவு விற்பனையாவது குறிப்பிடதக்கது. கேண்டீன் வருவாய் விட அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கும் அவல நிலை உள்ளது.

தொப்பி கடை

படகு குழாமில் சுற்றுலா பயணிகளுக்காக டி சர்ட், தொப்பிகள் விற்பனை கடை உள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ. 300 விற்பனை நடக்கிறது. ஆனால், அங்கு வேலை செய்யும் 2 ஊழியர்களுக்கு மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் கொடுக்கும் நிலை உள்ளது. வருவாயை உயர்த்த புது புது டிசன்கள் டி சர்ட், தொப்பி, மற்ற விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்தால் அதிக விற்பனையாகும்.கடந்த 10 ஆண்டிற்கு முன்பு நல்ல லாபத்துடன் இயங்கிய படகு குழாம் நிர்வாக குளறுபடியால், வருவாய் குறைந்து தள்ளாடிக் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் படகு குழாமில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம் வழங்க வேண்டிய சம்பளம் வரும் அளவுக்கு வருவாய் ஈட்டினால் கூட குழாமை தொடர்ந்து இயக்க சமாளிக்க முடியும். ஆனால், ஒவ்வொரு மாதமும், பாப்ஸ்கோ, பாசிக், பி.ஆர்.டி.சி., போல அரசின் மானிய உதவியை கையேந்தி பெரும் நிலைக்கு படகு குழாம் தள்ளப்பட்டுள்ளது.இதே நிலை தொடர்ந்தால், ஓரிரு மாதத்தில் நோணாங்குப்பம் படகு குழாம் மூடுவிழா காணும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, படகு குழாமை லாபத்தில் இயங்க வைக்க ஐ.ஏ.எஸ்., தலைமையிலான சிறப்பு அதிகாரியை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து, முறைகேட்டில் ஈடுப்பட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

visu
ஏப் 13, 2025 17:03

அரசு நிறுவனம் என்று ஆகிவிட்டால் ஊழியர்கள் வேலை செய்யமாட்டார்கள் அவை நட்டத்தில் இயங்கும் வருமானத்தை விட ஊதிய செலவு அதிகம் என்றால் நிறுவனம் எப்படி நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை