சாதிப்பரா சிந்து, லக்சயா * துவங்குகிறது ஜப்பான் பாட்மின்டன்
குமமோட்டோ: ஜப்பானில் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) வென்ற இந்திய வீராங்கனை சிந்து இதில் பங்கேற்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் காலிறுதியுடன் திரும்பிய சிந்து, அடுத்து டென்மார்க் (காலிறுதி), பின்லாந்து (முதல் சுற்று) என பல்வேறு தொடரில் ஏமாற்றினார். தற்போது புதிய பயிற்சியாளர் அனுப் ஸ்ரீதர், தென் கொரியாவின் லீ சியுனுடன் இணைந்து, மீண்டு வந்துள்ளார். தற்போது பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-8' வீராங்கனை தாய்லாந்தின் புசானனை சந்திக்க உள்ளார். அவர் கூறுகையில்,''உடல், மனதளவில் 'பிட்' ஆக உள்ளேன். ஜப்பான், சீன தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன்,'' என்றார். லக்சயா எதிர்பார்ப்புஇந்திய வீரர் லக்சயா சென், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நுாலிழையில் நழுவவிட்டார். அடுத்து நடந்த பின்லாந்து, ஓடென்ஸ் தொடரில் ஏமாற்றம் தந்தார். இம்முறை முதல் சுற்றில் மலேசியாவின் லியாங் ஹாவோவை எதிர்கொள்கிறார். இரட்டையர் பிரிவில் இந்திய சார்பில் திரீசா, காயத்ரி ஜோடி மட்டும் களமிறங்குகிறது.