ஆஷஸ்: ஆஸ்திரேலியா முன்னிலை * இங்கிலாந்து பவுலர்கள் திணறல்
பிரிஸ்பேன்: ஆஷஸ், பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக பிரிஸ்பேன் மைதானத்தில் ('காபா') நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325/9 ரன் எடுத்திருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரண்டன் பந்தில் ஆர்ச்சர் (38) அவுட்டானார்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்னில் ஆல் அவுட்டானது. ஜோ ரூட் (138) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட் கைப்பற்றினார்.நல்ல துவக்கம்ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், வெதரால்டு ஜோடி வேகமான துவக்கம் தந்தது. 13.1 ஓவரில் 77 ரன் சேர்த்த போது, ஹெட் (33) அவுட்டானார். வெதரால்டு, 72 ரன் (12x4, 1x6) எடுத்தார். லபுசேன் 65 ரன் எடுத்து திரும்பினார்.கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னுக்கு கார்ஸ் பந்தில் வீழ்ந்தார்.கேமரான் கிரீன் 45, இங்லிஸ் 23 ரன் எடுத்தனர். இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 378/6 ரன் எடுத்து, 44 ரன் முன்னிலை பெற்றது. கேரி (46), நேசர் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்தின் கார்ஸ் 3, கேப்டன் ஸ்டோக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.அதிக ரன்பகலிரவு டெஸ்டில் ஒரே நாளில் நேற்று, அதிகபட்சம் 387 ரன் (இங்கிலாந்து 9, ஆஸி., 378) எடுக்கப்பட்டன. முன்னதாக 2019, அடிலெய்டு போட்டியில் 383 ரன் (ஆஸி., 287, பாக்., 96) எடுக்கப்பட்டு இருந்தது. * பகலிரவு டெஸ்டில் ஒரு நாளில் அதிக ரன் எடுத்த அணியானது ஆஸ்திரேலியா (378). இதற்கு முன் 2017ல் எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இங்கிலாந்து அணி 348 ரன் (எதிர்-வெ.இண்டீஸ்) எடுத்திருந்தது.* ஆஷஸ் வரலாற்றில் 1950க்குப் பின், ஒரு நாளில் ஆஸ்திரேலியா எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் 378 ரன் ஆனது. 2006-07, பெர்த் டெஸ்ட், 3வது நாளில் 408 ரன் எடுத்தது முதலிடத்தில் உள்ளது.