உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆசிய கோப்பை...யாருக்கு அதிர்ஷ்டம்: இந்திய அணியில் இடம் பிடிக்க

ஆசிய கோப்பை...யாருக்கு அதிர்ஷ்டம்: இந்திய அணியில் இடம் பிடிக்க

மும்பை: ஆசிய கோப்பை 'டி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. 'டி-20' வீரர்கள் 'தொழிற்சாலையே' இந்தியாவில் உள்ளது எனலாம். அந்த அளவுக்கு திறமையான 30 வீரர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து தரமான 15 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் உள்ளனர். சுப்மன் எதிர்பார்ப்பு: சூர்யகுமார் தலைமையில் கடந்த 20 'டி-20' போட்டிகளில் இந்தியா 17ல் வென்றது. இதன் வெற்றி சதவீதம் 85. இந்த போட்டிகளில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை. ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய சுப்மன் (754 ரன்), பிரிமியர் 'டி-20' தொடரில் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக 650 ரன் (ஸ்டிரைக் ரேட் 156) எடுத்தார். இவரை ஆசிய கோப்பை அணியில் சேர்க்க முயற்சிக்கின்றனர். மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக நியமிக்க விரும்புகின்றனர். ஆசிய கோப்பை முடிந்த உடன் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்.2ல் துவங்குகிறது. இதனால் ஓய்வு இல்லாமல் சுப்மன் விளையாட நேரிடும். 'டாப் ஆர்டரில்' சஞ்சு சாம்சன்(கீப்பர்-பேட்டர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளனர். 'ஆல்-ரவுண்டராக' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெறலாம். ரிங்கு சிங் இடம் பெறுவது சந்தேகம். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா இடம் பெறலாம். 'சுழலில்' பலம் சேர்க்க வருண் சக்ரவர்த்தி இடம் பெற வாய்ப்பு உண்டு. ரிஷாப் பன்ட் காயத்தால் அவதிப்படுவதால், இரண்டாவது விக்கெட்கீப்பர் இடத்துக்கு ஜிதேஷ் சர்மா, துருவ் ஜுரல் இடையே போட்டி காணப்படுகிறது. பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்காக அசத்திய ஜிதேஷ் வாய்ப்பு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை