சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாப் சிம்ப்சன் 89, காலமானார்.பாப் சிம்ப்சன் தனது 16வது வயதில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக முதல் தர போட்டியில் களமிறங்கினார். 'பேட்டிங் ஆல்-ரவுண்டரான' இவர், 1957ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.62 டெஸ்ட் (4869 ரன், 10 சதம், 27 அரைசதம், 71 விக்கெட்), 2 ஒருநாள் போட்டியில் (36 ரன், 2 விக்கெட்) விளையாடிய சிம்ப்சன், 257 முதல் தர போட்டியில் (21,029 ரன், 60 சதம், 100 அரைசதம், 349 விக்கெட்) பங்கேற்றுள்ளார். தவிர இவர், 39 டெஸ்டில் (12 வெற்றி, 15 'டிரா', 12 தோல்வி) ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார்.கடந்த 1978ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். பின், 1986-1996ல் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ், 1987ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியா, 4 முறை ஆஷஸ் தொடரை கைப்பற்றியது. சிறந்த 'பீல்டரான' சிம்ப்சன், 'சிலிப்' பகுதியில் 110 'கேட்ச்' செய்துள்ளார். கடந்த 2013ல் ஐ.சி.சி., சார்பில் வெளியான சிறந்த வீரர்களுக்கான 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டார்.பிரதமர் இரங்கல்: இந்நிலையில் சிட்னியில் வயது மூப்பு காரணமாக சிம்ப்சன் காலமானார்.ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனேஸ் கூறுகையில், ''ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு சிம்ப்சன் ஆற்றிய பங்கு மகத்தானது. இவரது செயல்பாடு, ரசிகர்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்,'' என்றார்.