| ADDED : ஜூலை 14, 2024 12:19 AM
கோவை: சச்சின், சுரேஷ் குமார் அரைசதம் கடந்து கைகொடுக்க கோவை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.கோவையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை, 'நடப்பு சாம்பியன்' கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.நெல்லை அணிக்கு மோகித் ஹரிஹரன் (1) ஏமாற்றினார். ஹரிஷ் (29) ஓரளவு கைகொடுத்தார். ஷாருக்கான் 'வேகத்தில்' அஜிதேஷ் (17), நிதிஷ் ராஜகோபால் (3) போல்டாகினர். சூர்யபிரகாஷ் (7), ஈஸ்வரன் (8) நிலைக்கவில்லை. கேப்டன் அருண் கார்த்திக் (47), சோனு யாதவ் (43*) நம்பிக்கை அளித்தனர். நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது. கோவை அணி சார்பில் ஷாருக்கான், முகமது தலா 2 விக்கெட் சாய்த்தனர்.சவாலான இலக்கை விரட்டிய கோவை அணிக்கு சாய் சுதர்சன் (8) சோபிக்கவில்லை. பின் இணைந்த சுரேஷ் குமார், பாலசுப்ரமணியம் சச்சின் ஜோடி கைகொடுத்தது. கோவை அணி 39/1 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அபாரமாக ஆடிய சச்சின் 40 பந்தில் அரைசதம் எட்டினார். சுரேஷ் குமார், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.கோவை அணி 13 ஓவரில் 111/1 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. சோனு யாதவ் வீசிய 16வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய சச்சின், மோகன் பிரசாத் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். 144 ரன் சேர்த்திருந்த போது காயம் காரணமாக சச்சின் (76*) 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். செரியன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ஷாருக்கான் வெற்றியை உறுதி செய்தார்.கோவை அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. சுரேஷ் குமார் (63), ஷாருக்கான் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.