தமிழக அணி சாம்பியன் * உ.பி., அணியை வென்றது
மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 23 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்ற கர்னல் சி.கே.நாயுடு தொடர் ('ஸ்டேட் ஏ டிராபி') ஒருநாள் நடந்தது. 'டி' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி முதலிடம் (6ல் 5 வெற்றி, 1 தோல்வி) பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதில் ஆந்திராவை வென்றது. அரையிறுதியில் பெங்காலை வீழ்த்தியது.மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று பைனல் நடந்தது. இதில் தமிழகம், உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி கேப்டன் சமீர் ரிஸ்வி, பீல்டிங் தேர்வு செய்தார்.முதலில் களமிறங்கிய தமிழக அணிக்கு ஆதிஷ் (53), சாத்விக் (12) ஜோடி துவக்கம் கொடுத்தது. கேப்டன் பூபதி வைஷ்ண குமார் 37 ரன் எடுத்தார். முகமது அலி 57, மானவ் 57 ரன் எடுத்து அசத்தினர். ஜெயந்த் (32) சற்று கைகொடுக்க, தமிழக அணி 49.3 ஓவரில் 297 ரன்னில் ஆல் அவுட்டானது.முகமது 'ஐந்து'பின் களமிறங்கிய உ.பி., அணிக்கு சமீர் ரிஸ்வி, 41 ரன் எடுத்தார். பிரஷாந்த் வீர் 87 ரன் விளாசினார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, உ.பி., அணி 47.5 ஓவரில் 241 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. 56 ரன்னில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் ஆனது. முகமது அலி 5 விக்கெட் சாய்த்தார்.