இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர்
புதுடில்லி: இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'ஸ்பான்சர்' ஒப்பந்தத்தில் இருந்து 'டிரீம் லெவன்' விலகியது. புதிய 'ஸ்பான்சர்' ஏல அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் முடியாத நிலையில் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய பெண்கள் பங்கேற்கும் ஒருநாள் தொடர்களுக்கான ஜெர்சியில் எவ்வித விளம்பரமும் இடம் பெறவில்லை. இதனிடையே, ஏல விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று கடைசி நாள் என்ற நிலையில், புதிய ஸ்பான்சராக, ஹரியானாவின் குருகிராமில் உள்ள 'அப்பல்லோ டயர்ஸ்' நிறுவனம் தேர்வானது. இதன்படி, 'அடுத்த மூன்று ஆண்டுக்கு, இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் 121 இரு தரப்பு போட்டிகள், 21 ஐ.சி.சி., போட்டிகளுக்கு, ரூ. 579 கோடி தர முன்வந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு போட்டிக்கும் ஒப்பந்த தொகையாக, ரூ. 4.5 கோடி பி.சி.சி.ஐ., க்கு அப்பல்லோ வழங்கும். இதற்கு முன் 'டிரீம் லெவன்' நிறுவனம் ரூ. 358 கோடி (ஒரு போட்டிக்கு ரூ. 4.0 கோடி) வழங்கியது.