மேலும் செய்திகள்
உலக கோப்பை: சாதிக்குமா இந்தியா
29-Sep-2025
விசாகப்பட்டனம்: விசாகப்பட்டன கிரிக்கெட் மைதானத்தின் இரு பகுதிக்கு மிதாலி ராஜ், ரவி கல்பனா பெயர் வைக்கப்பட உள்ளன.பெண்கள் உலக கோப்பை தொடரில் இரு முக்கிய லீக் போட்டிகள் விசாகப்பட்டன கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்க உள்ளன. இதில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா (அக். 9), 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (அக். 12) எதிர்கொள்கிறது. இம்முறை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறுகிறது. விசாகப்பட்டனத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இங்குள்ள ஆடுகளத்தில் ரன் மழை பொழியலாம். ஒருநாள் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 387/5 ரன் (எதிர், வெ.இண்டீஸ், 2019) குவித்தது. 300 ரன்களை எளிதாக எட்டலாம் என்பது இந்திய வீராங்கனைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீண்ட இடைவெளிஇங்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. கடைசியாக இந்தியா (50 ஓவரில் 229/5)-இலங்கை (44 ஓவரில் 134 ரன்னுக்கு ஆல் அவுட்) மோதின. மிதாலி ராஜ் சதம் (104) விளாச, இந்திய அணி 95 ரன் வித்தியாசத்தில் வென்றது. தற்போது விசாகப்பட்டன மைதான கேலரியின் இரு பகுதிகளுக்கு முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கீப்பர்-பேட்டர் ரவி கல்பனாவின் பெயரை வைக்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான விழா இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு (அக்.2) முன் நடக்கும். மந்தனா கோரிக்கைசமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 'வீரர்களை போல வீராங்கனைகளின் பெயரையும் மைதான கேலரிக்கு வைக்க வேண்டும்,' என ஆந்திய அமைச்சர் நர லோகேஷிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஆந்திர கிரிக்கெட் சங்கம் நிறைவேற்ற உள்ளது.நர லோகேஷ் கூறுகையில்,''மக்களின் உணர்வுகளை மந்தனாவின் கருத்துகள் பிரதிபலித்தன. இவரது எண்ணங்களை நிறைவேற்றும் பணியில் அரசு இறங்கியது. இரு சாதனை வீராங்கனைகளை கவுரவிக்க உள்ளோம்,''என்றார்.23 ஆண்டு பயணம்தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 42. ஆந்திராவுக்காக விளையாடினார். இந்திய அணிக்காக 232 ஒருநாள் போட்டி (7805 ரன்), 89 டி-20 (2364), 12 டெஸ்டில் (699) பங்கேற்றார். 23 ஆண்டுகள் விளையாடிய இவர், 2022ல் ஓய்வு பெற்றார். ஆந்திராவை சேர்ந்த பேட்டர், கீப்பரான ரவி கல்பனா, இந்தியாவுக்காக 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். ஆட்டோ டிரைவரின் மகளான இவர், சக வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளித்தார். 2022ல் ஓய்வு பெற்றார்.
29-Sep-2025