இளம் இந்தியா முன்னிலை
மக்காய்: யூத் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இளம் இந்திய அணி முன்னிலை பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), இரண்டு யூத் டெஸ்டில் மோதுகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று மக்காயில் துவங்கியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் டர்னர் (6), சைமன் (0), ஹோல்லிக் (7) என 'டாப்-3' வீரர்கள் ஏமாற்ற, கேப்டன் வில் மலாஜ்ஜக் (10) அணியை கைவிட்டார். யாஷ் தேஷ்முக் 22 ரன் எடுத்தார். பின் வரிரையில் அலெக்ஸ் லீ யங், 66 ரன் எடுத்து கைகொடுத்தார்.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஹெனில் படேல், கிலான் படேல் தலா 3 விக்கெட் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு விஹான் மல்ஹோத்ரா (11), கேப்டன் ஆயுஷ் மாத்ரே (4) ஏமாற்றம் தந்தனர். வைபவ் 14 பந்தில் 20 ரன் எடுத்தார். வேதாந்த் (25), கிலான் (26) உதவினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 144/7 ரன் எடுத்து 9 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஹெனில் (22), தீபேஷ் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.