சவாலான டெஸ்ட்: சிராஜ் பெருமிதம்
புதுடில்லி: ''டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் நாள் முழுவதும் பல சவால் நிறைந்திருக்கும்,'' என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் அசத்திய இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், 10 விக்கெட் சாய்த்தார் இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 'இம்பேக்ட் பிளேயர்' விருது, சிராஜுக்கு வழங்கப்பட்டது. தவிர, 2025ல் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் (8 போட்டி, 37 விக்கெட்) பிடித்தார். இதுகுறித்து சிராஜ் கூறியது:வெஸ்ட் இண்டீஸ் தொடர் சிறப்பானதாக இருந்தது. ஆமதாபாத்தில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்தது. ஆனால் டில்லியை பொறுத்தவரையில் அதிக ஓவர்கள் பந்து வீச நேர்ந்தது. இங்கு வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டும், ஐந்து விக்கெட்டுக்கு சமமானதாக நான் உணர்ந்தேன். ஏனெனில் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது.வேகப்பந்து வீச்சாளராக இருந்து, சிறப்பான செயல்பாட்டுக்குப் பின் இதற்கான அங்கீகாரம் கிடைக்கும் போது, கூடுதல் நம்பிக்கை கொடுக்கிறது. தற்போது 'டிரசிங் ரூமில்' கிடைத்த 'இம்பேக்ட் பிளேயர்' விருது மகிழ்ச்சியை தருகிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாதனைக்கும் மிகவும் பெருமைப்படுவேன். இந்திய அணிக்காக தொடர்ந்து இதுபோன்ற திறமை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் மனதளவிலும், உடல் ரீதியாகவும் நாள் முழுவதும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இது சற்று வித்தியாசமானது தான் என்றாலும், பெருமைப்பட வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.