ஜார்க்கண்ட் பிடியில் தமிழகம் * தோல்வியை தவிர்க்க போராட்டம்
கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது தமிழக அணி.இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. கோயம்புத்துாரில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் அணி 419 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 18/5 ரன் எடுத்திருந்தது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தமிழக அணிக்கு அம்ப்ரிஸ் (28) மட்டும் கைகொடுத்தார். மற்றவர்கள் கைவிட, தமிழக அணி 93 ரன்னுக்கு சுருண்டு 'பாலோ ஆன்' பெற்றது. மீண்டும் திணறல்இரண்டாவது இன்னிங்சில் அம்ப்ரிஸ் (15), கேப்டன் ஜெகதீசன் (21) ஏமாற்றினர். மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி 52/3 ரன் எடுத்து, 274 ரன் பின்தங்கி இருந்தது. இன்று கடைசி நாளில் மீதமுள்ள பேட்டர்கள் பொறுப்பாக விளையாடினால், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம். பெங்களூருவில் நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் விதர்பா அணி (463), நாகலாந்து அணியை (171, 113) இன்னிங்ஸ், 179 ரன்னில் வீழ்த்தியது.