கோப்பை வென்றது ஆஸ்திரேலியா * கடைசி ஓவரில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா
கெய்ர்ன்ஸ்: மேக்ஸ்வெல் விளாசல் கைகொடுக்க, மூன்றாவது 'டி-20'ல் ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றது. 2-1 என தொடரை கைப்பற்றியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் இருந்தது. மூன்றாவது, கடைசி போட்டி கெய்ர்ன்ஸ் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் 'பவுலிங்' தேர்வு செய்தார்.பிரவிஸ் அரைசதம்தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் (1), ரிக்கிள்டன் (13) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. பிரிட்டோரியஸ் 24 ரன் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்த பிரவிஸ், 26 பந்தில் 53 ரன் (6X6, 1X4) எடுத்து, எல்லிஸ் பந்தில் மேக்ஸ்வெல் 'பிடியில்' சிக்கினார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 172/7 ரன் மட்டும் எடுத்தது. எல்லிஸ் 3, ஹேசல்வுட், ஜாம்பா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.மேக்ஸ்வெல் விளாசல்ஆஸ்திரேலிய அணிக்கு மார்ஷ், ஹெட் (19) ஜோடி துவக்கம் தந்தது. இங்லிஷ் 'டக்' அவுட்டாக, மார்ஷ் 37 பந்தில் 54 ரன் எடுத்தார். கிரீன் (9), டிம் டேவிட் (17) ஏமாற்ற, ஆஸ்திரேலியா 122/6 என திணறியது. பொறுப்பாக விளையாடிய மேக்ஸ்வெல், பவுண்டரி மழை பொழிந்தார். 30 பந்தில் அரைசதம் எட்டினார். கடைசி 18 பந்தில் 27 ரன் தேவைப்பட்டன. ரபாடா ஓவரில் மேக்ஸ்வெல் 15 ரன் அடித்தார். 19வது ஓவரை கார்பின், 'மெய்டனாக' வீசினார்.கடைசி ஓவரில் 10 ரன் தேவை என்ற நிலையில் லுங்கிடி வீசிய முதல் 4 பந்தில் 6 ரன் எடுக்கப்பட்டன. 5வது பந்தில் மேக்ஸ்வெல், 'ரிவர்ஸ் ஹிட்' முறையில் பவுண்டரி அடிக்க, ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 173/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் (36 பந்து, 62 ரன், 2X6, 8X4), ஜாம்பா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடர் (3 போட்டி), வரும் 19ல் கெய்ர்ன்சில் துவங்குகிறது.22 பந்தில்...ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான 'டி-20' போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என சாதனை படைத்தார் தென் ஆப்ரிக்காவின் பிரவிஸ் (22 பந்து). முன்னதாக இங்கிலாந்தின் ரவி போபரா 23 பந்தில் (2014) அரைசதம் அடித்திருந்தார்.