விராத் கோலி சூறாவளி வீசுமா... * மூன்றாவது ஒருநாள் போட்டியில் எதிர்பார்ப்பு
விசாகப்பட்டினம்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராத் கோலி 'ஹாட்ரிக்' சதம் விளாச காத்திருக்கிறார். பவுலர்களும் அசத்தினால், இந்திய அணி தொடரை கைப்பற்றலாம். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்ல, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) நடக்க உள்ளது. ஜெய்ஸ்வால் பலவீனம்இந்திய அணிக்கு துவக்கத்தில் ஜெய்ஸ்வால் தடுமாறுகிறார். யான்சென், பர்கர் போன்ற இடது கை 'வேகங்களிடம்' 30 முறை (டெஸ்டில் 9, 'டி-20'ல் 19, ஒருநாள் போட்டியில் 2) அவுட்டாகியுள்ளார். இவரது பலவீனத்தை இந்திய அணி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் அல்லது கடந்த போட்டியில் சதம் அடித்த ருதுராஜை துவக்கத்தில் களமிறக்கலாம். அனுபவ ரோகித், கோலி ரன் மழை பொழிவது பலம். * கோலி கடந்த இரு போட்டியில் (135, 105) அசத்தினார். இன்றும் சதம் விளாசினால், ஒருநாள் அரங்கில் 2வது முறையாக 'ஹாட்ரிக்' சதம் எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம். ஏற்கனவே, 2018ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தொடர்ந்து 3 சதம் (140, 157, 107) அடித்தார். தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து நான்கு சதம் அடித்த முதல் வீரராகலாம். * விசாகப்பட்டின மைதானம் கோலிக்கு ராசியானது. இங்கு 7 ஒருநாள் போட்டியில் 3 சதம், 2 அரைசதம் உட்பட 587 ரன் (சராசரி 97.83, ஸ்டிரைக் ரேட் 100.34) குவித்துள்ளார். * கோலி இன்று 90 ரன் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 'டி-20') 28,000 ரன் எடுத்த மூன்றாவது வீரராகாலம். முதல் இரு இடங்களில் சச்சின் (இந்தியா, 664 போட்டி, 34,357), சங்ககரா (இலங்கை, 594 போட்டி, 28,016) உள்ளனர். கோலி இதுவரை 555 போட்டியில் 84 சதம், 144 அரைசதம் உட்பட 27,910 ரன் (சராசரி 52.46) எடுத்து உள்ளார். தடுமாறும் 'வேகம்'கடந்த 2019ல் 'ஹாட்ரிக்' சதம் அடித்த இன்னொரு வீரரான ரோகித் நல்ல 'பார்மில்' உள்ளார். கடைசி கட்டத்தில் கைகொடுக்க, கேப்டன் ராகுல், ரவிந்திர ஜடேஜா உள்ளனர். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் அல்லது திலக் வர்மா களமிறக்கப்படலாம். பந்துவீச்சில் அர்ஷ்தீப் தவிர மற்ற 'வேகங்கள்' ரன்னை வாரி வழங்குகின்றனர். இதனால் தான் கடந்த போட்டியில் 358 ரன் குவித்தும், தோற்க நேர்ந்தது. பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணாவுக்கு மாற்று பவுலர்கள் இல்லாதது பாதகம். 'சுழலில்' குல்தீப் யாதவ் மிரட்டலாம்.இருவர் காயம்தென் ஆப்ரிக்க அணியில் மார்க்ரம், பிரீட்ஸ்கி, பிரவிஸ், யான்சென், பாஷ் போன்ற விளாசல் பேட்டர்கள் இருப்பது பலம். தொடைப்பகுதி பிடிப்பால் அவதிப்படும் பர்கர், ஜோர்ஜிக்கு பதிலாக பார்ட்மென், ரிக்கிள்டன் இடம் பெறலாம். கேப்டன் பவுமாவின் வியூகம் அணிக்கு பெரும் வரம். பந்துவீச்சில் யான்சென், மஹாராஜ் கைகொடுக்கலாம்.ஆடுகளம் எப்படிவிசாகப்பட்டினம், ராஜசேகர ரெட்டி மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. * இங்கு ஒருநாள் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் முதல் முறையாக மோத உள்ளன.மழை வருமாவிசாகப்பட்டினத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவில், பனிப்பொழிவு பவுலர்களுக்கு தொல்லை கொடுக்கும். இதனால், 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். 'டாஸ்' வெல்லும் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்யும்.