ஜிம்பாப்வே, நமீபியா தகுதி * உலக கோப்பை டி-20 தொடருக்கு
ஹராரே: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு ஆப்ரிக்க மண்டலத்தில் இருந்து, ஜிம்பாப்வே, நமீபிய அணிகள் தகுதி பெற்றன. இந்தியா, இலங்கையில், அடுத்த ஆண்டு ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இடங்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படுகிறது.ஜிம்பாப்வேயில் நடந்த ஆப்ரிக்க மண்டல அணிகளுக்கான தகுதிச் சுற்றில் 8 அணிகள் பங்கேற்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் நமீபிய அணி (174/6), தான்சானியாவை (111/8) 63 ரன்னில் வென்றது. மற்றொரு அரையிறுதியில் முதலில் களமிறங்கிய கென்யா, 122/6 ரன் (20 ஓவர்) எடுத்தது. ஜிம்பாப்வே அணி 15 ஓவரில் 123/3 ரன் எடுத்து 7 விக்கெட்டில் வென்றது. இதையடுத்து பைனலுக்கு (இன்று) முன்னேறிய ஜிம்பாப்வே, நமீபிய அணிகள், 2026 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. இதுவரை எத்தனைஇதுவரை நேரடியாக 12, தகுதிச்சுற்றில் இருந்து கனடா (அமெரிக்கா), இத்தாலி, நெதர்லாந்து (ஐரோப்பா), ஜிம்பாப்வே, நமீபியா (ஆப்ரிக்கா) என 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆசிய-பசிபிக் மண்டல தகுதிச்சுற்று அக்., 8-17ல் ஓமனில் நடக்க உள்ளன. இதில் 'டாப்-3' இடம் பெறும் அணிகள் பிரதான தொடருக்கு முன்னேறலாம்.