வைபவ் சூர்யவன்ஷிக்கு விருது * ஜனாதிபதி முர்மு வழங்கினார்
புதுடில்லி: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருது பெற்றார். இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 14. பீஹாரை சேர்ந்த இவர், அதிரடியாக ரன் சேர்ப்பதில் வல்லவர். மின்னல் வேக சதங்களாக விளாசுகிறார். இந்த ஆண்டு பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 35 பந்தில் சதம் (எதிர் குஜராத்) விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் (4 நாள்) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 58 பந்தில் சதம் அடித்தார். கத்தாரில் நடந்த 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை தொடரில் இந்திய 'ஏ' அணிக்காக 42 பந்தில் 144 ரன் (எதிர், யு.ஏ.இ.,) எடுத்தார். சையது முஷ்டாக் அலி உள்ளூர் 'டி-20' தொடரில் 61 பந்தில் 108 ரன் (எதிர், மஹாராஷ்டிரா) எடுத்தார். சாதனைக்கு கவுரவம்தற்போது விஜய் ஹசாரே டிராபி, உள்ளூர் ஒருநாள் தொடரில் பீஹார் அணிக்காக விளையாடுகிறார். 36 பந்தில் சதம் (எதிர், அருணாச்சல்) அடித்தார். இதன் மூலம் லிஸ்ட் 'ஏ' போட்டியில் இளம் வயதில் சதம் (14 ஆண்டு 272 நாள்) அடித்து சாதித்தார். 150 ரன்னை 59 பந்தில் எட்டினார். 'லிஸ்ட் ஏ' அரங்கில் அதிவேகமாக 150 ரன் எடுத்த வீரர் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை (64 பந்து, 2015) முந்தி, முதலிடம் பிடித்தார். மொத்தம் 84 பந்தில் 190 ரன் விளாசினார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இளம் நட்சத்திரங்களுக்கான ((5-18 வயது) 'பிரதமரின் பால புரஸ்கார் விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டார். இவ்விருது கலை, கலாசாரம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. நேற்று டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதினை சூர்யவன்ஷிக்கு வழங்கினார். இரு வீராங்கனைகள்நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு, 15, செஸ் நாயகி வாகா லட்சுமி பிரக்னிகாவும், 7, இவ்விருதினை பெற்றனர். கர்நாடாகாவை சேர்ந்த தினிதி, பாரிஸ் ஒலிம்பிக் (2024) 200 மீ.,. பிரீஸ்டைல் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். கோவாவில் நடந்த தேசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றார். குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பிரக்னிகா, இந்த ஆண்டு செர்பியாவில் நடந்த 'பிடே' உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்பில் 9/9 புள்ளி பெற்று கோப்பை வென்றார். ஜனாதிபதி முர்மு கூறுகையில்,''விருது வென்றவர்கள் தங்களது குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். கடும் போட்டி நிலவும் கிரிக்கெட் உலகில், பல சாதனைகள் படைத்து தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி,''என்றார்.