முகமது ஷமி வருகையில் தாமதம்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிக்கல்
பெங்களூரு: பெங்கால் ரஞ்சி அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஷமி தேர்வு செய்யப்படாததால், ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 34. கடைசியாக கடந்த ஆண்டு (நவ. 19) ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் விளையாடினார். கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த பிப்ரவரி மாதம் 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,) காயத்தில் இருந்து மீண்டு வர பயிற்சி மேற்கொண்டார். தற்போது இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் முன்னிலையில் பவுலிங் பயிற்சியில் ஈடுபடுகிறார்.இந்திய அணிக்கு திரும்புவதற்காக, ரஞ்சி கோப்பை போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ளார் ஷமி. இதனால் கர்நாடகா (நவ. 6-9, பெங்களூரு), மத்திய பிரதேச (நவ. 13-16, இந்துார்) அணிகளுக்கு எதிரான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்விரு போட்டியில் பங்கேற்கும் பெங்கால் அணிக்கு ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இவர், இந்திய அணிக்கு திரும்புவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இது, அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் இந்திய அணிக்கு சிக்கலாக அமையலாம். சமீபத்திய நியூசிலாந்து தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். வேகப்பந்துவீச்சுக்கு சாதமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில், ஷமி போன்ற அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்குவது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.ஷமி கூறுகையில், ''தற்போது பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். போட்டியில் 100 சதவீத உடற்தகுதியுடன் பங்கேற்க விரும்புகிறேன். இதில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. விரைவில் போட்டிக்கு திரும்புவேன்,'' என்றார்.