தொடரை வென்றது இங்கிலாந்து: ஆஸி., அணி அதிர்ச்சி தோல்வி
சிட்னி: நான்காவது ‘டி–20’ போட்டியில், கடைசி ஓவரில் அசத்திய இங்கிலாந்து அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3–1 எனக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2–1 என முன்னிலையில் இருந்தது. நேற்று, சிட்னியில் 4வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (7), டொனால்டு (7), கேப்டன் ஹாரி புரூக் (9), டாம் பான்டன் (3) ஏமாற்றினர். இங்கிலாந்து அணி 32/4 ரன் எடுத்து திணறியது. பின் இணைந்த ஜோர்டான் காக்ஸ், ஜேம்ஸ் கோல்ஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது காக்ஸ் (23) அவுட்டானார். கோல்ஸ் (33), லியாம் டாசன் (23) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய சாம் கர்ரான், 28 பந்தில் அரைசதம் விளாசினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 181/7 ரன் எடுத்தது. கர்ரான் (50), ஓவர்டன் (20) அவுட்டாகாமல் இருந்தனர். மார்ஷ் சதம்
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் பிரேசர்–மெக்குர்க் (0) ஏமாற்றினார். சாம் ஹார்பர் (18), நிகில் சவுத்ரி (12), டிம் டேவிட் (12) சோபிக்கவில்லை. தனிநபராக அசத்திய கேப்டன் மிட்சல் மார்ஷ் 49 பந்தில் சதத்தை எட்டினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. ஹென்றி குரோகோம்ப் வீசிய 20வது ஓவரின் முதல் 3 பந்தில், 3 ரன் கிடைத்தது. அடுத்த இரு பந்தில் மார்ஷ் (119 ரன், 57 பந்து, 9X6, 9X4), ஜோயல் டேவிஸ் (0) அவுட்டாக, தோல்வி உறுதியானது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 174/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.