உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தலைதுாக்கும் சூப்பர் ஸ்டார் கலாசாரம்: ஹர்பஜன் சிங் ஆவேசம்

தலைதுாக்கும் சூப்பர் ஸ்டார் கலாசாரம்: ஹர்பஜன் சிங் ஆவேசம்

புதுடில்லி: ''இந்திய அணிக்கு 'சூப்பர்ஸ்டார்' தேவையில்லை. சிறப்பாக விளையாடும் வீரர்களே தேவை,''என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. இத்தொடரில் அனுபவ ரோகித் சர்மா (5 இன்னிங்ஸ், 31 ரன், சராசரி 6.20), கோலி (9 இன்னிங்ஸ், 190 ரன், சராசரி 23.75) சோபிக்கவில்லை. 'சூப்பர் ஸ்டார்' அடிப்படையில் நீடித்தனர்.இது குறித்து இந்திய அணியின் முன்னாள் 'சுழல்' நாயகன் ஹர்பஜன் கூறியது:இந்திய அணியில் 'சூப்பர் ஸ்டார்' கலாசாரம் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அணிக்கு 'சூப்பர் ஸ்டார்' வீரர்கள் தேவையில்லை. முன்னேற்ற பாதையில் பயணிக்க, சிறப்பாக விளையாடும் வீரர்களே தேவை. தங்கள் மனதில் பெரிய 'சூப்பர் ஸ்டார்' என கருதுபவர்கள் வீட்டில் இருந்தபடி கிரிக்கெட் விளையாடட்டும். திறமை அவசியம்: அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என விவாதிக்கின்றனர். மதிப்பு வாய்ந்த வீரர் என தேர்வு செய்தால், கபில்தேவ், கும்ளேவை கூட சேர்க்கலாம். இம்முறை தேர்வாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். கோலி, ரோகித் என யாராக இருந்தாலும், செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். கிரிக்கெட்டைவிட பெரிய வீரர்கள் இல்லை. 'பார்ம்' இல்லாதவர்களை நீக்க சொல்லவில்லை. இவர்கள், இங்கிலாந்து தொடருக்கு முன் கவுன்டி அல்லது உள்ளூர் போட்டியில் விளையாடி திறமை நிரூபிக்க வேண்டும். இந்திய அணிக்காக விளையாட திறமையான இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அனுபவ கோலி 2024ல் 11 டெஸ்டில் 440 ரன் தான் எடுத்துள்ளார். இதன் சராசரி 23.15 ரன். இது, இவரது மதிப்புக்கு ஏற்றது அல்ல. இவருக்கு பதில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்திருந்தால், அவரும் குறைந்தபட்சம் இதே சராசரி ரன்னை எடுத்திருப்பார். பும்ராவுக்கு சுமை:'பார்டர்-கவாஸ்கர்' தொடரில் பும்ரா இடம் பெறாமல் இருந்திருந்தால், இந்திய அணி தொடரை 0-5 அல்லது 0-4 என மோசமாக இழந்திருக்கும். கரும்பை சக்கையாக பிழிந்து சாறு எடுப்பது போல பும்ராவை பாடாய் படுத்தினர். ஹெட், லபுசேன், ஸ்மித் என யார் களமிறங்கினாலும், அவர்களை அவுட்டாக்க பும்ராவையே அழைத்தனர். சிட்னி டெஸ்டில் பந்துவீச முடியாத அளவுக்கு அவரது முதுகை 'ஒடித்து' (காயம்) விட்டனர். இவருக்கு எத்தனை ஓவர் வழங்க வேண்டும் என்பதை, அணி நிர்வாகம் முன்கூட்டியே தீர்மானித்திருக்க வேண்டும். சிட்னி போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. இங்கு, இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இரு சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது புரியாத புதிராக இருந்தது.இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழன்
ஜன 07, 2025 01:02

உண்மைதான் இந்த 5 ரன், 8 ரன்களை நானே எடுப்பேன் இதற்கு எதற்காக கோடிகளில் சம்பளம், 5 ஸ்டார் ஓட்டல் ரூம், ஏசி பஸ், உயர்ந்த தரமான இலவச சிகிச்சை, தரமான ருசியான உணவு, மற்றும் பல சலுகைகள் எல்லாம்?? மானம் மரியாதை இருந்தால் தானாக விலகி கவுரவமாக வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் ரன்கள் அடிக்க வேண்டும் இப்படி 10 ஆண்டுகளுக்கு முன் செய்த சாதனைகளை சொல்லி ஒட்டுன்னிகளாக ஒட்டிக் கொண்டிருக்கக் கூடாது


Raman
ஜன 07, 2025 16:58

Brilliant


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை