இந்தியா ‘ஏ’ ரன் குவிப்பு: துருவ், தேவ்தத் அரைசதம்
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி ‘பீல்டிங்’ செய்தது. இந்திய ‘ஏ’ அணிக்கு ஜெய்ஸ்வால் (0), சாய் சுதர்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. சாய் சுதர்சன் 41 ரன் எடுத்து திரும்பினார். யாஷ் ரத்தோட் (13) நிலைக்கவில்லை. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல், 80 ரன் எடுத்தார். ஸ்மரன் (0), வாஷிங்டன் சுந்தர் (8) கைவிட்ட போதும், கேப்டன் துருவ் ஜுரல் அரைசதம் எட்டினார். மானவ் சுதார் 22 ரன் எடுத்து உதவினார். அடுத்து துருவ் ஜுரல், ஆகாஷ் தீப் இணைந்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். முதல் நாள் முடிவில் இந்திய ‘ஏ’ அணி, 7 விக்கெட்டுக்கு 297 ரன் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 99, ஆகாஷ் தீப் 25 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து ‘ஏ’ சார்பில் பிரேசர் சீட், 4 விக்கெட் சாய்த்தார்.