உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மாறாத ரிஷப்...தேறாத இந்தியா: மடமடவென சரிந்த ‘பேட்டிங்’

மாறாத ரிஷப்...தேறாத இந்தியா: மடமடவென சரிந்த ‘பேட்டிங்’

கிறைஸ்ட்சர்ச்: இரண்டாவது டெஸ்டில், ரிஷப் பன்த் பொறுப்பற்ற ‘ஷாட்’ அடித்து ‘அவுட்’ ஆக, இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டி, கிறைஸ்ட்சர்ச், ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246/5 ரன் எடுத்திருந்தது.

ஐந்து விக்கெட்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. கம்போஜ் பந்தில் கிளன் பிலிப்ஸ் (36) அவுட்டானார். ஆகாஷ் தீப் ‘வேகத்தில்’ நாதன் ஸ்மித் (26), ஜேமிசன் (19) வெளியேறினர். குர்னுார் பிரார் பந்தில் பிளண்டல் (89) ‘பெவிலியன்’ திரும்ப, நிம்மதி ஏற்பட்டது. மாட் ஹென்றியை (19) அவுட்டாக்கிய ஆகாஷ் தீப், தனது 5வது விக்கெட்டை பெற்றார். ‘டெயிலெண்டர்’கள் கைகொடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சுப்மன் ஏமாற்றம்

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ‘டாப்–ஆர்டர்’ பேட்டர்கள் சொதப்பினர். ஜேக்கப் டபி வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் (0) போல்டானார். ஜேமிசன் ‘வேகத்தில்’ தேவ்தத் படிக்கல் (21), கேப்டன் சுப்மன் கில் (17) வெளியேற, 60/3 ரன் எடுத்து தவித்தது. இந்த சமயத்தில் ஜேக்கப் டபி வீசிய பந்தை ரிஷப் பன்த் சிக்சருக்கு அனுப்பினார். டபியின் அடுத்த ஓவரில் மீண்டும் சிக்சர் அடிக்க பார்த்தார். இம்முறை பந்து நல்ல உயரத்தில் பறக்க, ஜேமிசன் பிடித்தார். ரிஷப் (23) வீணாக விக்கெட்டை பறிகொடுத்தார். டபியின் துல்லிய பந்தில் அனுபவ ராகுல் (25) நடையை கட்டினார். நாதன் ஸ்மித் வீசிய நேற்றைய போட்டியின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் (10) அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 116/6 ரன் எடுத்து, 240 ரன் பின்தங்கியிருந்தது. துருவ் ஜுரல் (7) அவுட்டாகாமல் இருந்தார். இன்று ‘டெயிலெண்டர்’கள் தாக்குப்பிடித்தால், இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டலாம். சுருக்கமான ஸ்கோர் முதல் இன்னிங்ஸ் நியூசிலாந்து 356 (116.3 ஓவர்) பேட்டிங் பிளண்டல் 89(211) லதாம் 59(128) பவுலிங் ஆகாஷ் தீப் 5/99 (31.3 ஓவர்) பிரார் | 2/78 (9 ஓவர்)இந்தியா | 116/6 பேட்டிங் ராகுல் | 25(80)ரிஷப் | 23(39) பவுலிங் டபி | 2/21 (8 ஓவர்)ஜேமிசன் | 2/33 (13 ஓவர்) ஆகாஷ் தீப் 5 விக்கெட் நியூசிலாந்து மண்ணில், டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளரானார் ஆகாஷ் தீப். இதற்கு முன் ஜாகிர் கான் (4 முறை), இஷாந்த் சர்மா (3), மதன் லால், ஸ்ரீநாத் (தலா ஒரு முறை) 5 விக்கெட் சாய்த்தனர். * டெஸ்ட் அரங்கில் நேற்று 2வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார் ஆகாஷ் தீப். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக (6/99, பர்மிங்காம், 2025) அசத்தினார். ‘சிக்சர்’ யார் ‘டாப்’ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அரங்கில், அதிக சிக்சர் விளாசிய வீரர் பட்டியலில் ரிஷப் பன்த் (89 சிக்சர், 44 போட்டி) முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (88 சிக்சர், 64 போட்டி) உள்ளார். * டெஸ்ட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் ரிஷப் (109 சிக்சர், 54 போட்டி) இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஸ்டோக்ஸ் (138 சிக்சர், 122 போட்டி) நீடிக்கிறார். தொடரும் தவறு கிறைஸ்ட்சர்ச் ஆடுகளத்தில் நேற்று பேட்டர்கள் எதிர்பார்த்ததைவிட பந்துகள் அதிக உயரத்தில் ‘பவுன்ஸ்’ ஆகின. இதை பயன்படுத்தி நியூசிலாந்து ‘வேகங்கள்’ துல்லியமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தனர். இந்தியா 60/3 ரன் என தவித்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பன்த், நிதானமாக விளையாட தவறினார். வழக்கம் போல் இறங்கி வந்து சிக்சர் (டபி பந்தில்) அடிக்க முற்பட்டு அவுட்டானார். இதே போன்று தான் கவுகாத்தி டெஸ்டில் (2025) தென் ஆப்ரிக்காவின் யான்சென் பந்தில் அவுட்டானார். இவரது அணுகுமுறையில் மாற்றத்தை காண முடியவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடாதது இவரது பலவீனம். இந்திய அணியின் ‘ஸ்பின் பவுலிங்’ பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே கூறுகையில்,‘‘ரிஷாப் தனித்துவமான வீரர். கடந்த டெஸ்டில் சதம் அடித்தார். நல்ல ‘பார்மில்’ உள்ளார். ‘ரிஸ்க்’ எடுத்து விளையாடுவது இவரது ‘ஸ்டைல்’. இது சில நேரங்களில் கைகொடுக்கிறது. சில நேரங்கில் பாதகமாக மாறுகிறது. நேற்று ராகுல் உடன் ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து விளையாட வேண்டிய நிலையில் களமிறங்கினார். ஆனால், நினைத்தது போல நடக்கவில்லை,’’என்றார். முன்னாள் ‘ஸ்பின்னர்’ அஷ்வின் கூறுகையில்,‘‘ரிஷாப் பன்த் தவறு தொடர்கிறது. இக்கட்டான சமயத்தில் பந்தை துாக்கி அடிக்கிறார். இதை அறிந்து எதிரணியினர் பீல்டர்களை நிறுத்துகின்றனர். வசமாக சிக்கிவிடுகிறார். சரியான முடிவு எடுத்து ‘ஷாட்’ அடிப்பதில்லை,’’என்றார். என்னாச்சு பும்ரா டெஸ்டில் பும்ரா பந்துவீச்சு எடுபடவில்லை. இவரது வேகமும் குறைந்துவிட்டது. கடந்த 270 பந்துகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இது பற்றி சாய்ராஜ் பகுதுலே கூறுகையில்,‘‘ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீசுபவர் பும்ரா. நாம் எதிர்பார்ப்பது போல விரைவில் விக்கெட் வீழ்த்துவார்,’’என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை