உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய அணி போராடி தோல்வி: கடைசி ஓவரில் வென்றது ஆஸ்திரேலியா

இந்திய அணி போராடி தோல்வி: கடைசி ஓவரில் வென்றது ஆஸ்திரேலியா

சார்ஜா: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனே (2), ஜார்ஜியா (0) ஏமாற்றினர். கிரேஸ் ஹாரிஸ் (40), கேப்டன் தஹ்லியா மெக்ராத் (32), எல்லிஸ் பெர்ரி (32) நம்பிக்கை தந்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்தது. லிட்ச்பீல்டு (15) அவுட்டாகாமல் இருந்தார்.சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (6) ஏமாற்றினார். ஷபாலி வர்மா (20), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (16) ஆறுதல் தந்தனர். பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா ஜோடி கைகொடுத்தது. நான்காவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது தீப்தி (29) அவுட்டானார்.தனிநபராக போராடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 44 பந்தில் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. அன்னாபெல் பந்துவீசினார். பூஜா (9), அருந்ததி (0), ஸ்ரேயங்கா (0), ராதா யாதவ் (0) ஏமாற்றினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

வாய்ப்பு எப்படி

நான்கு போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலியா (8 புள்ளி) 'ஏ' பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது இந்திய அணி (4 புள்ளி, 'ரன் ரேட்' 0.322) 2வது இடத்தில் உள்ளது. இன்று பாகிஸ்தானுக்கு (2 புள்ளி, 'ரன்-ரேட்' -0.488) எதிரான கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து (4 புள்ளி, 'ரன் ரேட்' 0.282) வென்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோல்வியடைந்தால், 'ரன்-ரேட்' அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணி முடிவாகும். இங்கிலாந்து அசத்தல்சார்ஜாவில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஸ்காட்லாந்து அணிக்கு சாரா பிரைஸ் (27), கேப்டன் கேத்ரின் பிரைஸ் (33) ஆறுதல் தந்தனர். ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார். சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு மையா (62*), டேனி வியாட்-ஹாட்ஜ் (51*) கைகொடுக்க, 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 113 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து (6 புள்ளி) 'பி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை