இந்திய அணி அறிவிப்பு எப்போது * சென்னையில் முதல் டெஸ்ட்
புதுடில்லி: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இந்தியா வரவுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட், 3 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் சென்னையில் செப். 19-23ல் நடக்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப். 27-அக். 1) நடக்கும். குவாலியர் (அக். 6), டில்லி (அக். 9), ஐதராபாத்தில் (அக். 12) 'டி-20' போட்டி நடக்கவுள்ளன.இதற்கான இந்திய டெஸ்ட் அணியில் யார் யார் இடம் பெறுவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக இந்திய அணி சொந்தமண்ணில் (கடந்த பிப்.,-மார்ச்) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என கைப்பற்றியது.தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் சுப்மன் கில், ராகுல், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷாப் பன்ட், முகேஷ் குமார், ஸ்ரேயாஸ், அர்ஷ்தீப், பரத் உள்ளிட்டோர், இன்று துவங்கும் துலீப் டிராபி தொடரின் முதல் சுற்று போட்டிகளில் (செப். 5-8) பங்கேற்கின்றனர்.இப்போட்டிக்குப் பின் இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா தொடர காத்திருக்கிறார். கோலி, அஷ்வின், ஜடேஜா சேர்க்கப்படலாம். பும்ராவுக்கு ஓய்வு தரப்பட உள்ளது. இந்திய அணியின் வரும் செப். 12 முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். வங்கதேச வீரர்கள் செப். 15ல் பயிற்சியை துவக்குவர்.