விளாசுவாரா தல தோனி... * இன்று சென்னை-மும்பை மோதல்
மும்பை: பிரிமியர் லீக் போட்டியில் இன்று 'தல' தோனி விளாசினால், சென்னை அணி மீண்டும் வெற்றியை ருசிக்கலாம்.மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா 5 கோப்பை வென்று சமபலத்தில் இருப்பதால், 'கிளாசிக்' மோதலாக பார்க்கப்படுகிறது.மறக்க முடியுமாஇம்முறை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. அடுத்து வரிசையாக 5 தோல்விகளை சந்திக்க, கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. லக்னோவை வீழ்த்தி, ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இப்போட்டியில் 11 பந்தில் 26 ரன் விளாசிய கேப்டன் தோனி, அணிக்கு கைகொடுத்தார். 2024ல் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் தோனி 'ஹாட்ரிக்' சிக்சர் உட்பட 4 பந்தில் 20 ரன் எடுத்ததை மறக்க முடியாது. இதே போல இன்றும் தோனி விளாசினால், சென்னை எளிதாக வெற்றி பெறலாம்.லக்னோவுக்கு எதிராக துவக்கத்தில் அசத்திய ஷேக் ரஷீத், ரச்சின் நம்பிக்கை தருகின்றனர். 'மிடில் ஆர்டரில்' திரிபாதி, விஜய் சங்கர், ரவிந்திர ஜடேஜா எழுச்சி பெற வேண்டும். ஷிவம் துபே அதிரடிக்கு மாறினால் நல்லது.நுார் நம்பிக்கைமுதல் போட்டியில் மும்பை அணியை வேகத்தில் கலீல் அகமது (3 விக்.,), 'சுழலில்' நுார் (4 விக்.,) சிதறடித்தனர். இவர்கள் இன்றும் ஜொலிக்கலாம். அனுபவ அஷ்வின், ஜடேஜா, ஓவர்டன், கம்போஜ், பதிரானா மிரட்டலாம். புது வரவுகளான ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரவிஸ் வாய்ப்பு பெறுவது கடினம்.'பவுலிங்' பலம்மும்பை அணி துவக்கத்தில் தடுமாறினாலும், கடைசி இரு போட்டிகளில் (டில்லி, ஐதராபாத்) வென்ற உற்சாகத்தில் உள்ளது. ஏற்கனவே சென்னையிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம். ஐதராபாத்திற்கு எதிராக 16 பந்தில் 26 ரன் விளாசிய ரோகித் சர்மா 'பார்மிற்கு' திரும்பியிருப்பது பலம். இவருடன் ரிக்கிள்டன் நல்ல துவக்கம் தருகிறார். அதிரடிக்கு 'மிஸ்டர் 360' சூர்யகுமார், திலக் வர்மா, நமன் திர் உள்ளனர். 'ஆல்-ரவுண்டராக' கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வில் ஜாக்ஸ் கைகொடுக்கின்றனர்.பந்துவீச்சு பலமாக உள்ளது. 'யார்க்கர்' பும்ரா, பவுல்ட், தீபக் சகார் மிரட்டலாம். 'சுழல்' நாயகன் கரண் சர்மா விரல் காயத்தால் அவதிப்படுவது பலவீனம். வில் ஜாக்ஸ், பாண்ட்யா, 'சுழல்' புயல் சான்ட்னரும் சாதிக்கலாம்.யார் ஆதிக்கம்பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 40 போட்டியில் மோதின. மும்பை 21, சென்னை 19ல் வென்றன.வான்கடே மைதானத்தில் 12 போட்டியில் மோதின. மும்பை 7, சென்னை 5ல் வென்றன.மும்பைக்கு எதிரான கடந்த 4 போட்டிகளில் சென்னை தொடர்ந்து வென்றுள்ளது.மழை வருமாமும்பையில் வெப்பமான வானிலை காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை* மும்பை வான்கடே மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.