ஒருநாள் போட்டியில் ஜோ ரூட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
லண்டன்: இங்கிலாந்து ஒருநாள் போட்டி அணிக்கு ஜோ ரூட் திரும்பினார்.இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து 'டி-20' (2025, ஜன. 22, 25, 28, 31, பிப். 2), மூன்று ஒருநாள் போட்டிகள் (பிப். 6, 9, 12) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் (2025, பிப். 19 - மார்ச் 9) விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜோ ரூட் இடம் பெற்றுள்ளார். சுமார் 14 மாதங்களுக்கு பின் ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளார் ஜோ ரூட். கடைசியாக 2023, நவ. 11ல் கோல்கட்டா, ஈடன் கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஐ.சி.சி., உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடினார்.நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இடது கால் தொடையின் பின்பகுதியில் காயமடைந்த 'ஆல்-ரவுண்டர்', டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்கிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான 'லெக்-ஸ்பின்னர்' ரெஹான் அகமது, 'டி-20' போட்டிக்கு மட்டும் தேர்வானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகிய ஹாரி புரூக், இரு அணியிலும் இடம் பெற்றுள்ளார்.இங்கிலாந்து அணி: பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், அட்கின்சன், பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லிவிங்ஸ்டன், அடில் ரஷித், பில் சால்ட், மார்க் உட், சாகிப் மஹ்மூத், ஜோ ரூட் (ஒருநாள் போட்டி மட்டும்), ரெஹான் அகமது ('டி-20' போட்டி மட்டும்).