பைனலில் மும்பை அணி * வெளியேறியது குஜராத்
மும்பை: டபிள்யு.பி.எல்., தொடர் பைனலுக்கு இரண்டாவது முறையாக முன்னேறியது மும்பை அணி. நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை 47 ரன்னில் வீழ்த்தியது. இந்தியாவில், பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 'டி-20' 3வது சீசன் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டில்லி அணி (10 புள்ளி) நேரடியாக பைனலுக்குள் நுழைந்தது.நேற்று மும்பை, பிரபோர்ன் மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில், புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடம் பிடித்த மும்பை (10), குஜராத் (8) அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.சூப்பர் ஜோடி மும்பை அணிக்கு யாஸ்திகா பாட்யா (15) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த ஹேலி மாத்யூஸ், நாட் சிவர்-புருன்ட் ஜோடி நம்பிக்கை தந்தது. தனுஜா பந்தை சிக்சருக்கு அனுப்பி 36 பந்தில் அரைசதம் எட்டினார் ஹேலி. கிப்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய நாட் சிவர், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்த போது காஷ்வி பந்தில் ஹேலி (77) அவுட்டானார். நாட் சிவர், 77 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (36) 'ரன்-அவுட்' ஆனார். மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன் குவித்தது.பின் களமிறங்கிய குஜராத் அணிக்கு டேனியலி (34), லிட்ச்பீல்டு (31), பார்தி (30) சற்று கைகொடுத்தனர். மற்றவர் ஏமாற்ற, குஜராத் அணி 19.2 ஓவரில் 166 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. டில்லியுடன்...டபிள்யு.பி.எல்., தொடர் பைனல் நாளை மும்பையில் நடக்க உள்ளது. இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறிய டில்லி, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மும்பை வென்றால் இரண்டாவது கோப்பை கைப்பற்றலாம். டில்லி சாதித்தால் முதல் கோப்பை வெல்லலாம்.