நியூசிலாந்து அணிக்கு முதல் வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தியது
கவுகாத்தி: உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றி பெற்றது. லீக் போட்டியில் 100 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.அசாமின் கவுகாத்தியில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு சுசீ பேட்ஸ் (29) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த கேப்டன் சோபி டெவின் (63), புரூக் ஹாலிடே (69) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். மேடி கிரீன் (25) ஆறுதல் தந்தார்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்திருந்தது. வங்கதேசம் சார்பில் ரபேயா கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.பின் களமிறங்கிய வங்கதேச அணி தடுமாறியது. ருபியா ஹைதர் (4), ஷர்மின் (3), கேப்டன் நிகர் சுல்தானா (4), சோபனா (2) ஏமாற்றினர். லியா 'வேகத்தில்' சுமையா (1), ஷோர்னா (1) வெளியேறினர். பஹிமா (34*), ரபேயா கான் (25), நஹிதா (17) ஆறுதல் தந்தனர்.வங்கதேச அணி 39.5 ஓவரில் 126 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லியா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.சிக்சர் மழைஉலக கோப்பை (50 ஓவர்) வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய வீராங்கனைகள் வரிசையில் நியூசிலாந்தின் சோபி டெவின் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், இதுவரை 23 சிக்சர் பறக்கவிட்டார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் டீன்டிரா டாட்டின் (22 சிக்சர்) உள்ளார்.