உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பஞ்சாப் அணி மீண்டும் தோல்வி

பஞ்சாப் அணி மீண்டும் தோல்வி

ஐதராபாத்: பந்துவீச்சில் சொதப்பிய பஞ்சாப் அணி, மீண்டும் தோல்வி அடைந்தது.ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. பஞ்சாப் பத்தாவது முறையாக 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது.சாம் கர்ரான் தாயகம் (இங்கிலாந்து) திரும்பியதால், பஞ்சாப் கேப்டன் பொறுப்பை ஜிதேஷ் சர்மா ஏற்றார். 'டாஸ்' வென்ற இவர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

வலுவான துவக்கம்

பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங், அதர்வா நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாச, 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 97 ரன் எடுத்தது. 10வது ஓவரை வீசிய நடராஜன் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது 'வேகத்தில்' அதர்வா (46) வீழ்ந்தார். அரைசதம் கடந்த பிரப்சிம்ரன், 71 ரன் எடுத்தார். ரோசோவ், 49 ரன் விளாசினார். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா (32*) அதிரடி கைகொடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 214 ரன் எடுத்தது.

அபிஷேக் அரைசதம்

கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி துவக்கத்தில் தடுமாறியது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்தில் டிராவிஸ் ஹெட் (0) 'கோல்டன் டக்' அவுட்டானார். பின் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி (33) அசத்தினர். இவர்கள் பஞ்சாப் பந்துவீச்சை 'பஞ்சாக' பறக்க விட்டனர். தனது சூப்பர் 'பார்மை' தொடர்ந்த அபிஷேக் 21 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 66 ரன்னுக்கு வெளியேறினார். நிதிஷ் குமார், 37 ரன் எடுத்தார். கிளாசன் (42) வழக்கம் போல் விளாசினார். அதர்வா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சன்வீர் சிங் (6*) வெற்றியை உறுதி செய்தார். ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 215 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்