ரஞ்சி கோப்பை காஷ்மீர் ஏமாற்றம்
புனே: ரஞ்சி கோப்பை காலிறுதி முதல் இன்னிங்சில் ஒரு ரன் பின்தங்கிய ஜம்மு காஷ்மீர் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.புனேயில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ஜம்மு காஷ்மீர், கேரளா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் காஷ்மீர் 280, கேரளா 281 ரன் எடுத்தன. காஷ்மீர் அணி 2வது இன்னிங்சில் 399/9 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது.பின் 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கேரளா அணிக்கு கேப்டன் சச்சின் பேபி (48), சல்மான் நிசார் (44*), முகமது அசார் (67*) கைகொடுத்தனர். ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 2வது இன்னிங்சில் 295/6 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் ஒரு ரன் கூடுதலாக பெற்ற கேரளா அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் கேரளா அணி 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்கு முன் 2018-19 சீசனில் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. காஷ்மீர் அணி பரிதாபமாக வெளியேறியது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கேரளாவின் சல்மான் நிசார் (112*) ஆட்ட நாயகன் விருது வென்றார்.அரையிறுதியில் (பிப். 17-21) குஜராத்-கேரளா, விதர்பா-மும்பை அணிகள் விளையாடுகின்றன.