உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / புரட்சி புயல் கோலி: பாண்டிங் புகழாரம்

புரட்சி புயல் கோலி: பாண்டிங் புகழாரம்

சவுத்தாம்ப்டன்: ''இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் புரட்சிக்கு வித்திட்டவர் விராத் கோலி,'' என பாராட்டினார் பாண்டிங்.இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி, 35. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். அன்னிய மண்ணிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார். இவரது தலைமையில் இந்திய அணி பங்கேற்ற 68 டெஸ்டில் 40 வெற்றி, 17 தோல்வி, 11 'டிரா' சந்தித்தது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை (2018-19) வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார். 2020-21ல் மகள் பிறந்ததால் ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்தியா திரும்பினார். எஞ்சிய 'காபா' டெஸ்டில் ரகானே சிறப்பாக அணியை வழிநடத்த இந்தியா, தொடரை வென்றது.இந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. இங்கு கடந்த இரு தொடரில் (2018--19, 2020--21) அசத்திய இந்திய அணி, 'ஹாட்ரிக்' கோப்பை வெல்ல காத்திருக்கிறது. இம்முறை ரோகித் சர்மா தலைமை ஏற்கிறார். அனுபவ பேட்டராக கோலி மிரட்ட காத்திருக்கிறார்.இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியது: இந்தியாவில் ஏற்பட்ட டெஸ்ட் புரட்சியில் கோலிக்கு முக்கிய பங்கு உண்டு. கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்ட இவர், இந்திய கிரிக்கெட்டில் பெரும் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது சிறந்த பணியை முன்னாள் பயிற்சியாளர் டிராவிட் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தார். கோலி ஏற்படுத்திய தாக்கம் இந்திய அணியின் வளர்ச்சிக்கு கைகொடுத்தது. இவரை தவிர நிறைய நட்சத்திர வீரர்களும் அணியில் உள்ளனர். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 'காபா' டெஸ்டில் இந்தியா வென்று அதிசயம் நிகழ்த்தியது. வெளிநாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய பேட்டர்கள் விரைவாக பக்குவப்படுத்திக் கொள்கின்றனர். முன்பு போல அச்சப்படுவதில்லை. 'காபா', ஓவல் என உலகின் எந்த மைதானத்திலும் துணிச்சலாக விளையாடுகின்றனர். வேகப்பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. கடந்த 6-7 ஆண்டுகளாக அணியின் தலைமையும் வலுவாாக உள்ளது. ஐ.பி.எல்., தொடர் மூலம் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர்கள் உருவாகின்றனர். இவ்வாறு பாண்டிங் கூறினார்.27,000 ரன் நோக்கி...147 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27,000 ரன்னை அதிவேகமாக எட்டி சாதனை படைக்க உள்ளார் கோலி. இதற்கு 58 ரன் மட்டுமே தேவை. அடுத்து நடக்க உள்ள வங்கதேச டெஸ்ட் தொடரில் எட்டினால், சச்சின் சாதனையை தகர்ப்பார்.கோலி இதுவரை மூன்றுவித கிரிக்கெட்டிலும் 591 இன்னிங்சில் 26,942 ரன் எடுத்துள்ளார். டெஸ்டில் 8848 ரன் (191 இன்னிங்ஸ்), ஒருநாள் போட்டியில் 13906 ரன் (283 இன்னிங்ஸ்), 'டி-20' அரங்கில் 4188 ரன் (117 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சச்சின் 623 இன்னிங்சில் 27, 000 ரன்னை எட்டியிருந்தார்.* 27,000 ரன் எடுத்த நான்காவது வீரராகலாம் கோலி. இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சச்சின் (782 இன்னிங்ஸ், 34,357 ரன்), சங்ககரா (இலங்கை, 666 இன்னிங்ஸ், 28017 ரன்), பாண்டிங் (668 இன்னிங்ஸ், 27483 ரன்) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி