சுப்மன் கில், பும்ராவுக்கு ஓய்வா: இந்திய அணி அறிவிப்பு எப்போது
புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்தியாவின் சுப்மன் கில், பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன. 'டி-20' போட்டிகள் கான்பெரா (அக். 29), மெல்போர்ன் (அக். 31), ஹோபர்ட் (நவ. 2), கோல்டு கோஸ்ட் (நவ. 6), பிரிஸ்பேனில் (நவ. 8) நடக்கவுள்ளன.இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்படமாட்டார்கள். பாண்ட்யாவுக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி அல்லது ஷிவம் துபே தேர்வாகலாம். விக்கெட் கீப்பராக ராகுல் நீடிப்பார். இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம்.ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் என தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் சுப்மன் கில், பும்ராவுக்கு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படலாம். சுப்மனுக்கு ஓய்வு வழங்கப்பட்டால் துவக்க வீரருக்கான இடத்துக்கு அபிஷேக் சர்மா அல்லது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வாகலாம்.டெஸ்ட், 'டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, 7 மாதங்களுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளனர். கடைசியாக இவர்கள், கடந்த மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக ரோகித் தொடரலாம்.