ஸ்மித் 10,000 ரன்: சதம் விளாசினார் கவாஜா
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கவாஜா, ஸ்மித் சதம் விளாசினர்.இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஹெட் அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது பிரபாத் ஜெயசூர்யா பந்தில் ஹெட் (57) அவுட்டானார். மார்னஸ் லபுசேன் (20) நிலைக்கவில்லை.பின் இணைந்த கவாஜா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஸ்மித் 1 ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 10,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார்.பொறுப்பாக ஆடிய கவாஜா, டெஸ்ட் அரங்கில் தனது 16வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய ஸ்மித், தனது 35வது டெஸ்ட் சதம் அடித்தார். இவர்களை பிரிக்க முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறினர்.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 330 ரன் எடுத்திருந்த போது மழையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. கவாஜா (147), ஸ்மித் (104) அவுட்டாகாமல் இருந்தனர்.நான்காவது வீரர்தனது முதல் ரன்னை எடுத்த ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்னை எட்டிய 4வது ஆஸ்திரேலிய வீரர் ஆனார். இவர், 115 டெஸ்டில் (10,103 ரன், 35 சதம்) இம்மைல்கல்லை அடைந்தார். ஏற்கனவே பாண்டிங் (168 போட்டி, 13,378 ரன்), பார்டர் (156ல் 11,174), ஸ்டீவ் வாக் (168ல் 10,927) இந்த இலக்கை அடைந்தனர். சர்வதேச அளவில் இச்சாதனை படைத்த 15வது வீரர் ஸ்மித். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (200ல் 15,921) உள்ளார். கவாஸ்கரை முந்தினார்அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித், 35வது சதம் (115 டெஸ்ட்) அடித்தார். டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் லாரா (வெ.இ.,), கவாஸ்கர் (இந்தியா), யூனிஸ் கான் (பாக்.,), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோரை (தலா 34 சதம்) முந்தி 7வது இடம் பிடித்தார். முதலிடத்தில் சச்சின் (51 சதம், இந்தியா) உள்ளார்.