சூர்யா ஹாட்ரிக்: மதுரை வெற்றி: நெல்லை அணி ஏமாற்றம்
சேலம்: சூர்யா ஆனந்த் 'ஹாட்ரிக்' சாதனை படைக்க, மதுரை அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லை அணி ஏமாற்றியது.சேலத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார். மழையால் போட்டி 35 நிமிடம் தாமதமாக துவங்கியது.மதுரை அணிக்கு பாலசந்தர் அனிருத் (48), அதீக் உர் ரஹ்மான் (36), குர்ஜப்னீத் சிங் (24) கைகொடுத்தனர். மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் சோனு 3, ராக்கி பாஸ்கர் 2 விக்கெட் சாய்த்தனர்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் 23 பந்தில் அரைசதம் எட்டினார். ரித்திக் ஈஸ்வரன் (25) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய அருண் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். வெற்றிக்கு 12 பந்தில் 11 ரன் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய சூர்யா ஆனந்த், முதல் பந்தில் சோனுவை (32) போல்டாக்கினார். மூன்றாவது பந்தில் யுதீஸ்வரனை (0) வெளியேற்றிய சூர்யா, அடுத்த இரு பந்தில் சச்சின் ரதி (0), செரியனை (0) அவுட்டாக்கி வெற்றியை உறுதி செய்தார்.நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. மதுரை சார்பில் சூர்யா 4 விக்கெட் சாய்த்தார்.