தமிழக அணி ஏமாற்றம்: விஜய் ஹசாரே டிராபியில்
ஆமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வியடைந்தது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி 33வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஆமதாபாத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கர்நாடகா அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.தமிழக அணிக்கு அதிஷ் (14) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஜெகதீசன் (65), பிரதோஷ் ரஞ்சன் பால் (57) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். ஆன்ட்ரி சித்தார்த் (1) சோபிக்கவில்லை. பாபா இந்திரஜித் (28), முகமது அலி (31), சாய் கிஷோர் (38) ஆறுதல் தந்தனர். சன்னி சாந்து (17), சோனு யாதவ் (12), குர்ஜப்னீத் சிங் (9) நிலைக்கவில்லை.தமிழக அணி 49.5 ஓவரில், 288 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கோவிந்த் கணேஷ் (1) அவுட்டாகாமல் இருந்தார். கர்நாடகா சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட் கைப்பற்றினார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கர்நாடகா அணிக்கு தேவ்தத் படிக்கல் (22), கருண் நாயர் (17), ரவிச்சந்திரன் ஸ்மரன் (15) கைகொடுக்கவில்லை. கேப்டன் மயங்க் அகர்வால் (55), கிருஷ்ணன் ஷ்ரிஜித் (77), ஷ்ரேயஸ் கோபால் (55) நம்பிக்கை தந்தனர். கர்நாடகா அணி 47.1 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 293 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அபினவ் மனோகர் (20), வித்யாதர் பாட்டீல் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 தோல்வி என, 4 புள்ளிகளுடன் தமிழக அணி 6வது இடத்தில் உள்ளது.