தமிழக அணி அபார வெற்றி: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்
விஜயநகரம்: விஜய் ஹசாரே லீக் போட்டியில் தமிழக அணி 10 விக்கெட்டில், திரிபுராவை வீழ்த்தியது.இந்தியாவில் விஜய் ஹராரே டிராபி ('லிஸ்ட் ஏ') தொடர் நடக்கிறது. 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஆந்திராவில் நடந்த போட்டியில் தமிழகம், திரிபுரா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தமிழகம் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய திரிபுரா அணி, வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கி தள்ளாடியது. ஜெஹு ஆண்டர்சன் (12), அக்னி சோப்ரா (23), மோகித் (17) தவிர வேறு யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. திரிபுரா அணி 21.2 ஒவரில், 71 ரன்னுக்கு சுருண்டது. வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் சாய்த்தார்.எளிய இலக்கைத் துரத்திய தமிழக அணி 10 ஓவரில் 75/0 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. துஷார் (27), ஜெகதீசன் (46) அவுட்டாகாமல் இருந்தனர். 'டி' பிரிவில் தமிழக அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டியில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் (1 ரத்து) 14 புள்ளி எடுத்து, பட்டியலில் இரண்டாவதாக உள்ளது.
கருண் நாயர் உலக சாதனை
மற்றொரு போட்டியில் விதர்பா அணி (313/2), உ.பி., (307/8) அணியை வீழ்த்தியது. விதர்பா கேப்டன் கருண் நாயர், 112 ரன்னில் அவுட்டானார். முன்னதாக இவர், கடந்த 4 போட்டியில் 112, 44, 163, 111 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதைடுத்து 'லிஸ்ட் ஏ' போட்டியில் தொடர்ந்து அவுட்டாகாமல் இருந்து அதிக ரன் சேர்த்து உலக சாதனை படைத்தார் கருண் நாயர் (மொத்தம் 542 ரன்). அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் பிராங்க்ளின் (2010ல் 527 ரன்) உள்ளார்.