பைனலில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பையில்
கொழும்பு: பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. இந்தியா, இலங்கையில், பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் பங்கேற்ற 5 போட்டியிலும் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்தது. நேற்று அரையிறுதி போட்டிகள் இலங்கையின் கொழும்புவில் நடந்தன.முதல் அரையிறுதியில் இந்திய அணி, பட்டியலில் நான்காவது இடம் பெற்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் பார்வை இழந்த இந்திய அணி கேப்டன் தீபிகா, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலி அணிக்கு ஜூலி (24), சனகன் (34) உதவ, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 109 ரன் மட்டும் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 11.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் பசந்தி ஹன்ஸ்தா, 39 பந்தில் 45 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இன்று நடக்கும் பைனலில் இந்திய அணி, நேபாளத்தை சந்திக்கிறது. விளையாடுவது எப்படிபார்வையற்றோர் கிரிக்கெட்டில் பிளாஸ்டிக் பந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்குள் சப்தம் எழுப்பும் வகையில் உலோக மணிகள் இருக்கும். பந்தை ஆடுகளத்தில் உருட்டி விடுவர். அப்போது ஏற்படும் சப்தம் வரும் திசையை கணித்து வீராங்கனைகள் பந்தை அடிப்பர். இதற்கேற்ப பந்து செல்வதை கணித்து பீல்டிங் செய்வர். பார்வையற்ற அணியில் 'பி1', 'பி2', 'பி3' என மூன்று வகை குறைபாடு கொண்ட வீராங்கனைகள் இடம் பெறுவர். முழு பார்வையற்ற ('பி1') வீராங்கனைக்கு மட்டும், பாதுகாப்பு காரணங்களுக்கான 'ரன்னர்' வைத்துக் கொள்ளலாம். இவர் எடுக்கும் 1 ரன், 2 ரன்னாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.