ஜிம்பாப்வே அணி திரில் வெற்றி: கடைசி பந்தில் ஆப்கனை வீழ்த்தியது
ஹராரே: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் ஏமாற்றியது.ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு கரிம் ஜனத் (54*), முகமது நபி (44), ஹஜ்ரதுல்லா ஜஜாய் (20) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது.ஜிம்பாப்வே அணிக்கு பிரைன் பென்னெட் (49), டியான் மியர்ஸ் (32) நம்பிக்கை அளித்தனர். கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன. அஸ்மதுல்லா உமர்ஜாய் பந்துவீசினார். முதல் 5 பந்தில், ஒரு பவுண்டரி உட்பட 10 ரன் கிடைத்தன. கடைசி பந்தில் முசேகிவா ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முசேகிவா (16), வெலிங்டன் மசகட்சா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.